Last Updated : 18 May, 2017 05:09 PM

 

Published : 18 May 2017 05:09 PM
Last Updated : 18 May 2017 05:09 PM

பாகுபலி 2 வெற்றி நிஜமாக இருந்தாலும் நம்புவது கடினமாக இருக்கிறது: இயக்குநர் ராஜமெளலி

'பாகுபலி 2' வெற்றி நிஜமாக இருந்தாலும் நம்புவது கடினமாக இருக்கிறது என்று இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர், ராணா, தமன்னா நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது 'பாகுபலி 2'. இயக்குநர் ராஜமெளலி, தயாரிப்பாளர் ஷோபு, அனுஷ்கா மற்றும் இசையமைப்பாளர் கீராவாணி ஆகியோர் வெளிநாடுகளில் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

'பாகுபலி 2' படத்துக்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு குறித்து இயக்குநர் ராஜமெளலி, "நடிகர்கள் கதாபாத்திரங்களை சரியாக புரிந்து கொண்டு நடிக்க ’பாகுபலி’ உலகை உருவாக்கினோம். பாகுபலி, பல்லால தேவா இருவரைப் பற்றியும் நாம் திரையில் பார்ப்பது சிறிய பகுதிதான்.

‘பாகுபலி’ உலகத்தில் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது. இது மற்ற கதாபாத்திரங்களுக்கும் பொருந்தும். ’பாகுபலி’ உலகம் மிக அற்புதமானது. அது முடியக்கூடாது என விரும்புகிறேன், அதற்கு பிரார்த்திக்கிறேன்.

ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு கதை இருக்கிறது. சில அழுத்தமான காட்சிகள் சொல்லப்படவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் திரைப்படத்தில், அதற்கே உண்டான சில கட்டுப்பாடுகளால் எல்லா கதைகளும் அங்கு சுவாரசியமாகாது. உதாரணத்துக்கு சிவகாமியின் கதை மிகவும் வலிமையானது, முழுமையானது. அது ஒரு நாவலாக வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். (சிவகாமியின் கதை, 3 பகுதி நாவலாக, ஆனந்த் நீலகண்டனால் எழுதப்பட்டு, தி ரைஸ் ஆஃப் சிவகாமி என்ற முதல் பகுதி வெளியாகியுள்ளது. )

நான் டிஸ்னி படங்களின் பெரிய ரசிகன். 3டி அனிமேஷன் மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு இருந்தது. அதன் வழியாக ’பாகுபலி’ உலகத்த்துக்கு வடிவம் கொடுக்கலாம் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமா போல அது பலரை சென்றடையாது என்றாலும், அது புகழ்பெற்ற ஒரு வடிவம். விரைவில் இந்தியாவில் பிரபலமாகும். கிராஃபிக் இந்தியாவும், அமேசான் ப்ரைமும் இந்த அனிமேஷன் படத்துக்காக இணைந்துள்ளார்கள். (பாகுபலி: தி லாஸ்ட் லெஜண்ட்ஸின் இரண்டாவது பகுதி வெள்ளிக்கிழமை அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது)

அனிமேஷன் படம் இயக்குவது, கேட்க சுவாரசியமாக இருந்தாலும், ’பாகுபலி’யை உருவாக்க எங்களுக்கு 5 வருடங்கள் ஆனது. மீண்டும் அப்படி ஒரு நேரத்தை என்னால் ஒரு அனிமேஷன் படத்துக்காக செலவழிக்க இயலாது.

உண்மையாக சொல்கிறேன். இந்த மாதிரியான ஒரு வெற்றிக்காகத்தான் உழைத்தோம். அரும்பாடு பட்டு காத்திருந்தோம். அது கிடைக்கும்போது எங்களுக்கு நம்புவது கடினமாக இருக்கிறது. இந்த உணர்வை எங்களால் வர்ணிக்கவே முடியவில்லை. இந்த வெற்றி நிஜமாக இருந்தாலும் நம்புவது கடினமாக இருக்கிறது.

எனது நீண்ட நாள் ஆசை, மஹாபாரதக் கதையை படமாக்க வேண்டும் என்பதே. அது எவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்படவேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். எல்லாருடைய கற்பனயை தாண்டிய ஒன்றாக இருக வேண்டும். எனது மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்தாலும் எப்போது நடக்கும் எனத் தெரியவில்லை.

’பாகுபலி’, இதற்கான ஒரு சந்தை இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது. இனி இரண்டு வகையான படங்கள் வரும். முதல் வகை, நல்ல கதையம்சம், சிறந்த இயக்குநருடன் வருவது. இன்னொன்று, இந்த சந்தைக்காகவே வருவது" என்று தெரிவித்துள்ளார் ராஜமெளலி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x