Published : 20 Feb 2017 12:32 PM
Last Updated : 20 Feb 2017 12:32 PM
பாவனாவுக்கு நேர்ந்த அவலம் குறித்து கேரள திரைத்துறை மீது இயக்குநர் சனல் குமார் சசிதரன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை பாவனாவின் காருக்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இச்சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக 'ஒழிவுதிவசத்தே களி' இயக்குநர் சனல் குமார் சசிதரன், "நமது சினிமாவில் 99% திரைப்படங்கள் ஹீரோயிஸத்தைக் கொண்டாடுவதாகவே உள்ளன. நம் சினிமாவின் காதல் கதைகள், குடும்பக் கதைகள், இவ்வளவு ஏன்... கல்லூரிக் கதைகள் கூட ஆணாதிக்கத்தைத் தூக்கிப் பிடிப்பதாகவே உள்ளன.இதில் பெரும்பாலானவற்றிலும் பெண்களுக்கு எதிரான கொள்கைகள் மலிந்துள்ளன.
இந்தச் சூழலில், திரைப்படத் துறையில் இருந்து பாவனாவுக்கு ஆதரவாக உண்மையான நிலைப்பாட்டை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இனியாவது, திரைப்படங்களில் நாயகர்கள் வழிபாட்டில் இருந்து இந்த நாயகர்கள் விலகி இருப்பார்களா?" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சனல் குமார் சசிதரன், கடந்த ஆண்டு கவனம் ஈர்த்த 'ஒழிவுதிவசத்தே களி' படத்தின் இயக்குநர். 'காழ்ச்ச' என்னும் திரை அமைப்பை நிறுவிச் செயல்பட்டுவருகிறார். கேரள அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT