Published : 31 May 2019 03:16 PM
Last Updated : 31 May 2019 03:16 PM
ஜூனியர் என்.டி.ஆரால் மட்டுமே தெலுங்கு தேசம் கட்சியைக் காப்பாற்ற முடியும் என ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, ‘லட்சுமி என்.டி.ஆர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் ராம்கோபால் வர்மா. என்.டி.ஆரின் 2-வது மனைவி லட்சுமி பார்வதியின் பார்வையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பற்றிக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, இப்படம் வெளியாவதற்கு கடுமையான சவால்களைச் சந்தித்தது. இதனால், தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரபாபு நாயுடுவைக் கடுமையாகக் குற்றம்சாட்டினார் ராம்கோபால் வர்மா.
தற்போது முடிவடைந்துள்ள ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி பெரும் வெற்றிபெற்று, முதல்வராக நேற்று (மே 30) பதவியேற்றுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால், 'லட்சுமி என்.டி.ஆர்' படத்தை ஆந்திராவில் மறுபடியும் இன்று (மே 31) ரிலீஸ் செய்துள்ளார் ராம்கோபால் வர்மா.
இந்நிலையில், ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பதிவில், “ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்தினால், மக்கள் அந்தக் கட்சியின் மோசமான தோல்வியை உடனடியாக மறந்துவிடுவார்கள்.
என்.டி.ஆரின் பேரனால் மட்டுமே தெலுங்கு தேசம் கட்சியைக் காப்பாற்ற முடியும். அவரது தாத்தாவின் மீது அவருக்கு ஏதாவது மரியாதை இருக்குமென்றால், அவர் உடனடியாக தெலுங்கு தேசம் கட்சியைக் காப்பாற்ற வேண்டும். ஒரு என்.டி.ஆர் ரசிகனாக, உங்கள் தாத்தாவின் முதுகில் குத்தியவருடன் நீங்கள் இணையக்கூடாது என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT