Published : 05 Feb 2019 11:54 AM
Last Updated : 05 Feb 2019 11:54 AM

4 ஆண்டுகளுக்கு முன்னால் 500 ரூபாய்கூட இல்லை; இன்று ஃபோர்ப்ஸ் பட்டியலில்!- விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி

 

 

30 வயதுக்குள் சாதித்த 30 நபர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் ஒரேயொரு நடிகராக 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா மட்டும் தேர்வாகி உள்ளார்.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள விஜய் தேவரகொண்டா, ''என்னுடைய 25-வது வயதில் வங்கியின் குறைந்தபட்ச வைப்புத்தொகையான ரூ.500 கூட என்னிடம் இல்லை. அதற்காக ஆந்திர வங்கி என்னுடைய வங்கிக் கணக்கை முடக்கியது. என்னுடைய அப்பாதான் பணத்தைக் கொடுத்து செட்டில் செய்யச் சொன்னார்.

 

ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து இன்று, ஃபோர்ப்ஸ் நட்சத்திரப் பட்டியலில் 30 வயதுக்குள் சாதித்த 30 பேரின் பட்டியலில் இருக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

 

இவருடன் யூடியூபில் நடித்துப் பிரபலமான பிரஜக்தா கோலி, கிரிக்கெட்டர் ஸ்மிரிதி மந்தனா, விளையாட்டு வீரர்கள் ஹிமா தாஸ் மற்றும் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பலர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

 

'அர்ஜுன் ரெட்டி' தெலுங்குப் படத்தின் மூலம் மொழி கடந்து ஏராளமான ரசிகர்களைப் பெற்ற இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான 'கீதா கோவிந்தம்', 'டாக்ஸிவாலா' படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

 

'நோட்டா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் விஜய் தேவரகொண்டா. ஆனந்த் சங்கர் இயக்கிய இந்தப் படம், அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்குப் வெற்றி பெறவில்லை. எனினும் விஜய் தேவரகொண்டாவின் க்ரேஸ் இன்னும் குறையவில்லை.

 

தற்போது 'டியர் காம்ரேட்' என்னும் படத்தில் கம்யூனிசக் கொள்கைகளைப் பின்பற்றும் மாணவர் தலைவராக நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x