Published : 27 Nov 2018 05:23 PM
Last Updated : 27 Nov 2018 05:23 PM

சிரஞ்சீவி வீட்டுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்ற பேபி: ஃபேஸ்புக் நிகழ்த்திய ஆச்சரியம்

38 வயதான பேபிக்கு, கிழக்கு கோதாவரி பகுதியில் இருக்கும் ஒரு சிறிய கிராமமான வடிசலேருவில் இருந்து, நடிகர் சிரஞ்சீவியின் வீட்டுக்கு சிறப்பு விருந்தினராகச் செல்லும் பயணம் என்பது நம்ப முடியாத ஒன்று. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும் சந்தித்திருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்புதான் பாட்டியாக ஆனார் பேபி. ஆனால், தனது பேரக்குழந்தையுடன் அவரால் நேரம் செலவிட முடியவில்லை. பேபியை ஹைதராபாத் அழைத்துக்கொண்டே இருந்தது. இது எல்லாவற்றுக்கும் காரணம், பேபி பாடிய ஒரு சிறிய வீடியோ, சமூக வலைதளங்களில் தேசிய அளவில் பிரபலமானதுதான். அவரது வாழ்க்கையே அன்றிலிருந்து மாறிப்போனது.

நிலத்தில் வேலை செய்வது, தனது பிள்ளைகளைக் கவனிப்பது, பக்கத்தில் இருக்கும் முந்திரி தொழிற்சாலையில் வேலை என தனது கிராமத்தில் இருக்கும் எந்தப் பெண்ணையும் போலதான் பேபியின் வாழ்க்கையும். அவ்வப்போது பாடுவார். சுற்றியிருப்பவர்கள் பாராட்டுவார்கள்.

பேபி எப்போதும் பக்திப் பாடல்களே பாடுபவர். உள்ளூர் திருமண நிகழ்ச்சிகளில் பாடுவார். ‘யெவருன்னாரு பிரபு’ என்ற தெலுங்கு கிறிஸ்தவ பக்திப் பாடல் தொகுப்பிலும் பாடியுள்ளார். அவரது ஊரிலுள்ள தேவாலயத்தில் இருக்கும் பாதிரியார், இவரைப் பாட வைத்துள்ளார். பேபி எப்போதும் பக்திப் பாடல்களே பாடுவதால், பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் ஒருவர், பேபியை சினிமா பாடல் பாடச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.

அப்போது ‘ஓ செலியா’ பாடலை (தமிழில் ‘காதலன்’ படத்தில் ‘என்னவளே பாடல்’) பேபி பாட, அதை தனது மொபைலில் பதிவுசெய்து நண்பருக்குப் பகிர்ந்திருக்கிறார் அந்தப் பெண். நண்பர் அதை ஃபேஸ்புக்கில் பகிர, பேபியின் வாழ்க்கை மாற்றி எழுதப்பட்டது.

இசையமைப்பாளர் ரகு குன்சே, பேபிக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பைத் தந்துள்ளார். தொடர்ந்து இசையமைப்பாளர் கோட்டியும் வாய்ப்பு தந்துள்ளார். ஆனால், நடிகர் சிரஞ்சீவியை சந்தித்ததே தனது வாழ்வின் மிகப்பெரிய தருணம் என்கிறார் பேபி.

பேபி பற்றிப் பேசிய ரகு குன்சே, “அந்த வீடியோ பதிவைப் பார்த்து பேபி பற்றித் தெரிந்து கொண்டேன். அடுத்த 15 நாட்களில், ‘பலசா 1978’ என்ற படத்துக்கான பாடல் பதிவு இருக்கிறது. அதில், உன் அம்மா பாட வேண்டும் என பேபியின் மகளிடம் சொன்னேன். ‘பலசா 1978’, ‘கேங்ஸ் ஆஃப் வசேபூர்’ மாதிரியான ஒரு படம்.

நான் பேபி பாடும் வீடியோவை எனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தேன். அது ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து வைரலானது. சேனல்களில் அதைப் பற்றிப் பேசினார்கள். இசையமைப்பாளர்கள் பலர் பேபியைப் பாராட்ட ஆரம்பித்தனர். ‘போல் பேபி போல்’ நிகழ்ச்சிக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்தேன். ஒரு நாள் முன்னதாக வந்து பாடல் பாடும்படி அவரைக் கேட்டேன்.

அவரது குரலின் தன்மையை என்னால் நம்பவே முடியவில்லை. குறைந்தது 5 - 6 வருடங்கள் ஒருவர் பயிற்சி செய்தால் மட்டுமே அப்படியான குரல் அமையும். பேபி ஆசிர்வதிக்கப்பட்டவர். அவர் எந்த நிலையில் பாடுகிறார் என்பதே அவருக்குத் தெரியவில்லை. தன்னால் ஹை பிட்ச் பாட முடியாது என்றார். ஆனால், நான் அவரை முயற்சி செய்யச் சொன்னேன். அவர்  பாடியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பாடலாசிரியர் நெகிழ்ந்து கண்ணீர் சிந்த ஆரம்பித்துவிட்டார். எஸ்.ஜானகியைப் போல பேபி பாடுகிறார். அவ்வளவு இதமாக உள்ளது அவரது குரல்.

அவர் முறையாகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தால், அவரது குரலில் இருக்கும் இயற்கையான தன்மை மறைந்துவிடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. அதை நாம் புரிந்துகொண்டு, அவருக்கு ஏற்றார்போல பாடல்கள் தர வேண்டும் என நான் நினைக்கிறேன். அவருக்கு படிப்பறிவில்லை என்பதால் நாம் பாடுவதைப் புரிந்துகொண்டே பாடுகிறார்" என்றார்.

பேபிக்கு எழுத, படிக்கத் தெரிந்துகொள்ள, இசையமைப்பாளர் கோட்டி ஏற்பாடு செய்துள்ளார்.

“நான் பாடி முடித்தபின் தான் எப்படி இருக்கிறது என அவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால், இப்போதைக்கு இதுவே எனக்குப் போதும். கனவுபோல இருக்கிறது. எனது உலகம் சிறியது. யார் என்னை எங்கே அழைத்துச் சென்றாலும், நான் இப்படித்தான் இருப்பேன் என்பதை உறுதியாக நம்புகிறேன்” என்கிறார் பேபி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x