Published : 19 Oct 2018 06:46 PM
Last Updated : 19 Oct 2018 06:46 PM

விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

விஜய் தேவரகொண்டா ஜோடியாக தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் பரவலாக கவனம் ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்தடுத்து தன்னுடைய நடிப்பால் பலரையும் கவர்ந்து வருகிறார். தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘வடசென்னை’ படம் கடந்த 17-ம் தேதி ரிலீஸானது. பத்மா கேரக்டரில் அசத்தலாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கனா’ என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில், சத்யராஜின் மகளாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இதுதான். அந்தப் படத்தின் பூஜையின்போது, விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘அர்ஜுன் ரெட்டி’ மூலம் தெலுங்கு சினிமாவையும் தாண்டி தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள விஜய் தேவரகொண்டா, ‘கீதா கோவிந்தம்’ மூலம் அந்த ரசிகர்களைத் தக்க வைத்துள்ளார். அவருடைய முதல் தமிழ்ப்படமான ‘நோட்டா’வும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x