Published : 08 Jan 2025 03:56 PM
Last Updated : 08 Jan 2025 03:56 PM

நடிகை ஹனி ரோஸ் புகார் - கேரள தொழிலதிபர் கைது

கொச்சி: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறத்தல் புகாரில், கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில், “ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வயநாட்டில் தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்” என்றார். கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ஹனி ரோஸ், "இன்று எனக்கு மிகவும் அமைதியான நாள். நான் முதல்வர் பினராயி விஜயனிடம் இந்த விவகாரத்தை எழுப்பியபோது சம்மந்தப்பட்டவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்" என்று தெரிவித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு ‘திருவனந்தபுரம் லாட்ஜ்’ என்ற படத்தின் மூலம் பிரபலமான ஹனி ரோஸ், நகை வியாபாரம் செய்து வரும் பாபி செம்மனூர் மீது சமீபத்தில் போலீஸில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார்.

பாபி செம்மனூர், நகை வியாபாரம் செய்து வரும் செம்மனூர் குழுமத்தின் தலைவராவார். கடந்த 2012-ம் ஆண்டு, கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவை கேரளாவுக்கு அழைத்து வருவதில் முக்கிய பங்காற்றினார். அவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு இன்று (புதன்கிழமை) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஹனி ரோஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் தொழிலதிபர் ஒருவர் தன்னை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும், அது தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் பெயரைக் குறிப்பிடாமல் எச்சரித்திருந்தார்.

அதுகுறித்து அவர் கூறும்போது, “அந்த தொழிலதிபரின் வணிக நிறுவன திறப்பு மற்றும் சில நிகழ்ச்சிகளுக்கு மற்ற நடிகைகளைப் போல நானும் சென்றுள்ளேன். அவர் பொது நிகழ்ச்சியில், எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதை அடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அதைத் தெளிவாகத் தெரிவித்தேன். என்னைப் பற்றி இதுபோன்ற கருத்துகளைச் சொல்வதை ஏற்க முடியாது என்றேன்.

பிறகு அவர் நிறுவன நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் செல்ல மறுத்துவிட்டேன். ஆனால், அவர் தொடர்ந்து எனது பெயரைத் பயன்படுத்தி தவறாகப் பயன்படுத்தி வருகிறார். அவர் செயல் என்னைப் பழிவாங்குவது போல் இருக்கிறது. ஒருவரிடம் பணம் இருக்கிறது என்பதற்காக எந்த பெண்ணையும் அவமதிக்க முடியுமா? இது தொடர்ந்தால், சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x