Published : 14 Dec 2024 05:58 PM
Last Updated : 14 Dec 2024 05:58 PM
ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ ப்ரீமியர் காட்சி கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகார்த்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனை காண அவரது வீட்டில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் குவிந்தனர்.
‘புஷ்பா 2’ சிறப்பு காட்சியின்போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு எதிரான திரையுலக பிரபலங்கள் பலரும் எக்ஸ் தள பக்கத்தில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை சஞ்சல்குடா மத்திய சிறையிலிருந்து அல்லு அர்ஜுன் விடுவிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் குவிந்தனர்.
அல்லு அர்ஜுன் வீடு திரும்பியதும் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா ஆகியோர் அவரை கட்டி அணைத்தனர். ‘புஷ்பா 2’ படத்தின் இயக்குநர் சுகுமார் கட்டியணைத்து அல்லு அர்ஜுனுடன் சிறிது நேரம் பேசினார். சீரஞ்சிவியின் மனைவி சுரேகா, இயக்குநர்கள் கொரட்டலா சிவா, தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகர் ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் அல்லு அர்ஜுனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
முன்னதாக, சிறையிலிருந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜுன், “யாரும் கவலைப்பட வேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். நான் சட்டத்தை மதித்து நடப்பவன், சட்ட நடவடிக்கைகளில் ஒத்துழைப்பேன். கடந்த 20 ஆண்டுகளாக நான் திரையரங்குகளில் படம் பார்க்கச் செல்கிறேன். அது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. ஆனால் இந்த முறை, எதிர்பாராத சம்பவம் நடந்துவிட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எனது இரங்கலை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நடந்த நிகழ்வுக்காக வருந்துகிறோம்” என தெரிவித்தார்.
சர்ச்சை, கைது, ஜாமீன்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி (39) என்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்தார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார்.
கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் நேற்று (டிசம்பர் 13) அல்லு அர்ஜுனை காவல் துறையினர் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து விசாரணைக்காக அவர் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கோரி அல்லு அர்ஜுன் வழக்கறிஞர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை மாலையில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில், “சிறப்பு திரையிடலுக்குச் சென்றால், இப்படியான ஒரு துரதிஷ்வசமான நிகழ்வு நடைபெறும் என தெரிந்தே அல்லு அர்ஜுன் அங்கு சென்றுள்ளார்” என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி ஜுவ்வாடி ஸ்ரீதேவி, “நடந்த சம்பவத்துக்கு அவர் மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்? இத்தனைக்கும் அவர் அனுமதி பெற்று தான் அங்கு சென்றிருக்கிறார். ஒரு நடிகர் என்பதற்காக அவர் மொத்த பொறுப்பையும் ஏற்க முடியுமா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
பின்னர் அல்லு அர்ஜுனுக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை அல்லு அர்ஜுன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
BhAAi ante fire.. kani heart matram gold #NagaChaitanya met #AlluArjun garu and expressed his support. After some time, Chay was leaving, but @alluarjun garu despite his own challenges, cameback to personally send @chay_akkineni off. Even in tough times, he prioritizes others… pic.twitter.com/Si2gckR2Ec
— Naga Chaitanya FC (@ChayAkkineni_FC) December 14, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT