Published : 06 Sep 2024 08:55 PM
Last Updated : 06 Sep 2024 08:55 PM
ஹைதராபாத்: ரவி தேஜா நடித்த ‘மிஸ்டர் பச்சன்’ தெலுங்கு படம் பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், இந்தப் படத்துக்காக தான் பெற்ற சம்பளத்திலிருந்து ரூ.4 கோடியை நடிகர் ரவி தேஜா திருப்பி கொடுத்தார். அதேபோல படத்தின் இயக்குநரும் ரூ.2 கோடியை தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்பி கொடுத்துள்ளார்.
இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் தமிழில் வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தை ’கடலகொண்ட கணேஷ்’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தார். இந்தப் படம் ஓரளவு வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் ரவி தேஜாவை வைத்து ‘மிஸ்டர் பச்சன்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் இந்தியில் 2018-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ரெய்டு’ படத்தின் தழுவலாக உருவானது. படம்ரூ.80 கோடி பட்ஜெட்டில் படம் உருவானதாக கூறப்படுகிறது. படத்தை பீபிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் எதிர்மறையான விமர்சனங்களால் முதல் நாளில் இருந்தே படம் வரவேற்பை பெறவில்லை. ரூ.80 கோடி பட்ஜெட் கொண்ட படம் மொத்தமாகவே ரூ.15 கோடியை கூட வசூலிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் நஷ்டத்தை கணக்கில் கொண்டு தயாரிப்பு நிறுவனத்துக்கு, நடிகர் ரவி தேஜா, தான் பெற்ற சம்பளத்தில் இருந்து ரூ.4 கோடியை திருப்பி அளித்துள்ளார். அதேபோல படத்தின் இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் ரூ.2 கோடியை திருப்பி கொடுத்துள்ளார். தயாரிப்பு நிறுவனம் கேட்காத நிலையில், தானாகவே முன்வந்து படத்தின் நஷ்டத்தை கணக்கில் கொண்டு இருவரும் பணத்தை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment