Published : 03 Sep 2024 11:00 PM
Last Updated : 03 Sep 2024 11:00 PM
ஹைதராபாத்: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகளின் முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர்கள் மகேஷ்பாபு, பாலகிருஷ்ணா இருவரும் தலா ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆந்திராவில் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
இந்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நிதியுதவி அறிவித்து வருகின்றனர். முன்னதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் ரூ.25 லட்சம், நடிகர் ஜூனியர் என்டிஆர் ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தனர்.
அந்த வகையில் நடிகர் மகேஷ் பாபு ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இது குறித்து மகேஷ் பாபு தனது எக்ஸ் பதிவில், “ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெள்ளம் பாதித்துள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கும் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்க உள்ளேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி உதவிகளை வழங்கவும், மீட்பு பணிகளை எளிதாக்கவும் அந்தந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு கூட்டாக ஆதரவளிப்போம். இந்த நோக்கத்தில் அனைவரும் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியை தாண்டி நாம் பலமாக எழுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
In light of the floods impacting both the Telugu states, I am pledging a donation of 50 lakhs each to the CM Relief Fund for both AP and Telangana. Let’s collectively support the measures being undertaken by the respective governments to provide immediate aid and facilitate the…
— Mahesh Babu (@urstrulyMahesh) September 3, 2024
இதே போல நடிகர் பாலகிருஷ்ணாவும் ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். நடிகர் விஸ்வக் சென் ரூ.10 லட்சம், நடிகர் சித்து ஜோகன்னலகட்டா ரூ.30 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT