Published : 30 Aug 2024 04:36 AM
Last Updated : 30 Aug 2024 04:36 AM
திருவனந்தபுரம்: மலையாள நடிகை கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மற்றும் நடிகர்கள் ஜெயசூர்யா, இடவேளை பாபு ஆகியோர் மீது கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் விசாரணை நடத்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என நடிகர் சங்க செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகைகளுக்கு நடிகர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த, முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையில் கேரள அரசு கடந்த 2017-ம் ஆண்டு ஒரு குழு அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டே சமர்ப்பித்தது. ஆனால், இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில், அந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகின. அதில், மலையாள நடிகைகள் பட வாய்ப்புக்காக பல முறை பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர் என கூறப்பட்டிருந்தது. மேலும், பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தங்களுக்கு பாலியல் ரீதியில் தொல்லை தந்ததாக சில நடிகைகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
‘அம்மா’ சங்கம் கலைப்பு: இதையடுத்து, மலையாள நடிகர்கள் சங்கத்தின் (‘அம்மா’) தலைவர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சங்கம் தற்காலிகமாக கலைக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். இதுபோல இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக் ஆகியோரும் சங்க பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, இந்த புகார் குறித்து விசாரணை நடத்த கேரள அரசு ஒரு சிறப்பு விசாரணை குழு அமைத்தது. இக்குழுவினர் நடிகைகளின் வாக்குமூலங்களை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, நடிகை மினு முனீர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடவேளை பாபு ஆகியோர் படப்பிடிப்பின்போது என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர். உடல் ரீதியாகவும் துன்புறுத்தினர். ஒருமுறை கழிவறையில் இருந்து நான் வெளியே வந்தபோது ஜெயசூர்யா என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்” என்றார். இதுதொடர்பாக காவல் துறையிலும் மினு முனீர் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லம் தொகுதி எம்எல்ஏவுமான முகேஷ் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 354-வது பிரிவின்கீழ் எர்ணாகுளம் மாராடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதே புகார் தொடர்பாக நடிகர்கள் ஜெயசூர்யா, இடவேளை பாபு மீதும் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். இதுதவிர 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 509 (பெண்களை அவமானப்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயர்நிலை குழு அமைப்பு: இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பினோய் விஸ்வம் கூறும்போது, “கேரள இடதுசாரி அரசு, பெண்களுக்கு ஆதரவாக செயல்படும். தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகிலும் நடிகைகளுக்கு பாலியல் பிரச்சினை இருக்கிறது. ஆனால், மலையாள திரையுலகில் இதுகுறித்த புகார் எழுந்ததும், நீதிபதி ஹேமா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நாட்டிலேயே இது தொடர்பாக குழு அமைத்த முதல் அரசு கேரளாதான். இக்குழுவின் அறிக்கை அடிப்படையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதுகுறித்து முகேஷ் வெளியிட்ட அறிக்கையில், “என் மீதும் சக நடிகர்கள் மீதும் கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரிக்க குழு அமைத்திருப்பதை வரவேற்கிறேன். பொதுவெளியில் விவாதிக்கப்படும் எங்கள் மீதான புகார்கள் குறித்து நேர்மையாகவும், வெளிப்படையாகவும் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். என் மீது புகார் கூறிய நடிகை ஏற்கெனவே என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார். அரசியல் ரீதியாக என்னை பழிவாங்க முயற்சி நடக்கிறது” என்றார்.
விஷால் தகவல்: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரான விஷால், தனது 48-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் முதியோர்களுக்கு காலை உணவு, இனிப்புகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல்தான் நிலவுகிறது. படப்பிடிப்புகளில் அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்கின்றன. அதேபோல பவுன்சர்களையும் (பாதுகாவலர்கள்) தங்களது பாதுகாப்புக்காக திரை நட்சத்திரங்கள் வைத்துள்ளனர்.
இருந்தாலும் ஹேமா கமிட்டி போலவே நடிகர் சங்கம் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். யார் தவறு செய்தாலும் நிச்சயம் தண்டனை கிடைக்கும். நடிகர் சங்கம் சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் புகார்கள் இல்லை: திருப்பூரில் செய்தியாளர்களிடம் தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று கூறியபோது, ‘‘கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தற்போது பரபரப்பாகி உள்ளது. தமிழகத்தில் அதுபோல எந்தவிதபுகார்களும் வரவில்லை. ஒருவேளை புகார்வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
முதல்வர் பினராயி விஜயனிடம் முகேஷ் விளக்கம்: பாலியல் புகாரில் சிக்கிய முகேஷ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த அவர், தன் மீதான புகார் பொய்யானவை என்று தெரிவித்துள்ளார். அதற்கு முதல்வர், பொய் புகார் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், கட்சித் தலைமை முகேஷுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, நடிகை தன் மீது பாலியல் புகார் கூறியதை அடுத்து, முன்ஜாமீன் கோரி எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் முகேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 3-ம் தேதி வரை முகேஷை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவிட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment