Last Updated : 29 Aug, 2024 07:36 PM

 

Published : 29 Aug 2024 07:36 PM
Last Updated : 29 Aug 2024 07:36 PM

சூர்யாவின் சனிக்கிழமை Review: ‘மாஸ்’ நானி, மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா காம்போவில் படம் எப்படி?

அடிதடி, சண்டை என கோபக்கார சிறுவனான சூர்யாவை (நானி) நினைத்து பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர். ‘எப்போதும் கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தால் அதுக்கு மதிப்பு இருக்காது. ஆக, வாரத்தில் ஒருநாள் மட்டும் கோபத்தை வெளிப்படுத்து’ என சூர்யாவிடம் அவரது தாய் சத்தியம் வாங்கி கொள்கிறார். அம்மாவுக்கு கொடுத்த சத்தியத்தை பின்பற்றும் சூர்யா, 6 நாட்களில் தனக்கு ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு சனிக்கிழமையில் தணிக்கிறார்.

இதனிடையே, சோகுல பாலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் தயா (எஸ்.ஜே.சூர்யா), தனது தனிப்பட்ட கோபத்தை அப்பகுதி மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் அளவுக்கு கொடூரமான காவல் துறை அதிகாரி. தனது காதலி சாருலதா (பிரியங்கா மோகன்) மூலமாக இந்தப் பிரச்சினையை அறிந்துகொள்ளும் சூர்யா, சோகுல பாலம் பகுதிவாசிகளை தயாவிடம் இருந்து எப்படி மீட்கிறார் என்பது மீதிக்கதை. தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் டப்பிங் நேர்த்தியாக உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் துயரிலிருந்து மீட்க உதவும் மனித உணர்வு தான் கோபம் என்பதையும், எந்தச் சூழலிலும் ஒருவர் மற்றவருக்கு ஆதரவாக நிற்க வேண்டிய அவசியத்தையும் இப்படத்தின் வழியே பதிவு செய்கிறார் இயக்குநர் விவேக் ஆத்ரேயா. ஏதோ ஒரு காலக்கட்டத்தில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட மக்களை தொடர்ந்து அதே ‘டெம்ப்ளேட்’க்குள் அடைக்கும் பொதுபுத்தியையும், குடும்ப வன்முறைகளையும் தொட்டுச் செல்கிறது படம்.

அம்மா சென்டிமென்ட், நானி சனிக்கிழமை மட்டும் கோபம் கொள்வதற்கான காரணம், அதற்கான பின் கதை, அவருக்கான பில்டப், அதையொட்டி ஆக்‌ஷன், இன்ட்ரோ பாட்டு, எஸ்.ஜே.சூர்யா நிகழ்த்தும் ‘கொடூர’ங்கள், நடுவில் வந்து தொந்தரவு செய்யும் காதல் என வழக்கமான வெகுஜன ‘மசாலா’வின் காரம் சற்று தூக்கல்!

‘நான் ஈ’, ‘ரமணா’, ‘அந்நியன்’ படங்களின் ரெஃபரன்ஸ், நானி - எஸ்.ஜே.சூர்யா சந்தித்துக் கொள்ளும் தருணம், எதிர்பாராத திருப்பங்களால் வளையும் கதை, இயல்பாக வந்து செல்லும் நகைச்சுவை, மிக சொற்பமாக ஒட்டிக்கொள்ளும் எமோஷனல் காட்சிகள் ஆகியவை தேடிக் கண்டடைந்த பாசிட்டிவ் அம்சங்கள். அதைத் தாண்டி எல்லாவற்றையும் ‘மாஸ்’ தருணங்களாகவும், ஹீரோயிசமாகவும் மாற்ற முயற்சித்திருப்பது அலுப்பு. ஒவ்வொருத்தரிடமும் போய் ‘சனிக்கிழமை மட்டும் கோபப்படுவேன். ஏன்னா…’ என்று சொல்லிக்கொண்டிருப்பது போதும் பாஸ்!

ஏற்கெனவே கன்னியாகுமரி வரை நீட்டி இழுத்திருக்கும் படத்தின் க்ளைமாக்ஸில், சண்டைக்காட்சிக்கு நடுவே ஆசுவாசமாக அமர்ந்து நானிக்காக அவரது அப்பா பில்டப் ஏற்றிக் கொண்டிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவை போல் நாமும் புரியாமல் முழிக்க வேண்டியுள்ளது. சனிக்கிழமை நானியிடம் அடிவாங்குபவர்கள், அதே சனிக்கிழமை தான் மீண்டும் வந்து அடிக்கிறார்கள். மற்ற நாட்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள் போல.

‘நேச்சுரல் ஸ்டார்’ என்ற அடைமொழிக்கு ஏற்ப இயல்பான நடிப்பில் கவர்கிறார் நானி. அவரின் பக்கத்து வீட்டு பையன் சாயலால், அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளுடன் எளிதில் ஒன்ற முடிகிறது. அமைதி, ஆக்ரோஷம் இந்த இரண்டின் எல்லைகளின் உச்சத்தை தொடும் எஸ்.ஜே.சூர்யா, தனது ஈர்க்கும் உடல்மொழியாலும், ஏற்ற இறக்கு குரல் வளத்தாலும், டைமிங்கிலும், கொடூர வில்லனத்திலும் மிரட்டுகிறார். தனது அண்ணனை அவர் அசால்டாக டீல் செய்யும் இடம் அப்ளாஸ் அள்ளுகிறது.

அப்பாவி முகம், அநீதிக்கு எதிரான குரலுக்கு தோள் கொடுக்கும் பிரியங்கா மோகன் தேவையான பங்களிப்பை செலுத்துகிறார். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நடிக்கலாம். சில காட்சிகளே வந்தாலும், அழுத்தமான நடிப்பால் நினைவில் நிற்கிறார் முரளிகுமார். தவிர, அதிதி பாலன், சாய்குமார், அபிராமி, அஜய் கோஷ் மற்றும் ஊர்மக்களின் நடிப்பு படத்துக்கு பலம்.

நாயகன், வில்லன் இருவருக்குமான தனித்தனி ட்ராக், மாஸ் காட்சிகளுக்கு உயிரூட்டி கூஸ்பம்ஸ் கொடுக்க முயன்றிருக்கும் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டரை ஓவர் டேக் செய்து, கேமரா மூலம் தனது முத்திரையை பதிக்கிறார் ஒளிப்பதிவாளர் முரளி. கிட்டத்தட்ட 3 மணி நேரத்தை தொடும் நீளமான படத்தின் காட்சிகளுக்கு கருணை காட்டி வெட்டாமல் விட்ட படத்தொகுப்பாளர் கார்த்திகா பார்வையாளர்களுக்கும் கருணை காட்டியிருக்கலாம்.

மொத்தத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யாவால் உயிர் பிழைக்கும் இப்படம், புதுமையான விஷயங்களிலோ, கதையின் ஆழத்திலோ, அதன் அழுத்தமான கதை சொல்லும் முறையிலோ, முழுமையான எங்கேஜிங்கிலோ தடம் பதிக்காமல் தடுமாறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x