Published : 27 Aug 2024 06:57 AM
Last Updated : 27 Aug 2024 06:57 AM
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அது வெளியான பின் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். நடிகர்கள், சித்திக், ரியாஸ் கான் உட்பட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளன.
இதற்கிடையே வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இதனால் சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சித் விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் பதவியிலிருந்து அவர் விலகினார்.
இதற்கிடையே ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.
தனது ராஜினாமா பற்றி ரஞ்சித் கூறும் போது, “நான், அகாடமி தலைவர் பொறுப்பை ஏற்றதில் இருந்தே குறிப்பிட்ட சிலர், என்னைக் குறி வைத்து தாக்குகின்றனர். நான் பதவியை ராஜினாமா செய்தது, அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காகத்தான். இந்தக் குற்றச்சாட்டு குறித்து வழக்குத் தொடர இருக்கிறேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று கூடுவதாக இருந்த மலையாள நடிகர் சங்க செயற்குழு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
துணை நடிகை மீது சித்திக் புகார்: நடிகர் சித்திக், தன் மீது பாலியல் புகார் கூறிய துணை நடிகை ரேவதி சம்பத் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள் நோக்கம் இருப்பதாகவும் இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கேரள டிஜிபியிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே, மினு முனீர் என்ற நடிகை, நடிகர்கள் முகேஷ், மணியம்பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா மற்றும் சில தயாரிப்பு நிர்வாகிகள் மீதும் பாலியல் புகார் கூறியுள்ளார். மற்றொரு துணை நடிகை, நடிகர்கள் பாபுராஜ், ஷான் டைம் சாக்கோ மீது புகார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT