Published : 30 Jul 2024 09:34 PM
Last Updated : 30 Jul 2024 09:34 PM

வயநாடு துயரம்: திரைப்பட அறிவிப்புகளை ஒத்திவைத்த மலையாள திரையுலகம்!

திருவனந்தபுரம்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவை உலுக்கியுள்ள இந்த சம்பவத்தால் இன்று வெளியாக இருந்த திரைப்பட அறிவிப்புகள் மற்றும் நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஜிதின் லால் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ (Ajayante Randam Moshanam) படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்பட இருந்தது. ஆனால், வயநாடு துயரச் சம்பவத்தால் அப்டேட் இன்று வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் துக்கத்தில் பங்கெடுக்கும் வகையில் இன்று வெளியாக இருந்த படத்தின் அப்டேட் வேறொரு நாளுக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷாக் நாயர், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஃபுட்டேஜ்’ (Footage). இந்தப் படத்தை சைஜூ ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், “வயநாடு மக்களுக்காக பிரார்திக்கிறோம். துயர சம்பவத்தால் படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (amma), கேரள தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து நடத்த இருக்கும் விருது நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும், வயநாடு பேரிடர் தொடர்பாக மக்கள் தங்களை காத்துக்கொள்ள அவசரகால உதவி எண்களை பகிர்ந்துள்ள நடிகர்கள், மோகன்லால், மம்மூட்டி, பிருத்விராஜ் ஆகியோர் பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x