Published : 15 Jul 2024 05:49 PM
Last Updated : 15 Jul 2024 05:49 PM

காப்புரிமை மீறல்: கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி மீது வழக்குப் பதிவு

பெங்களூரு: தங்கள் அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக எம்ஆர்டி மியூசிக் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கன்னடத்தில் வெளியான ‘777 சார்லி’, ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி. இவரது பரம்வா ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான படம் ‘பேச்சிலர் பார்ட்டி (Bachelor Party). இந்தப் படத்தில் அனுமதியின்றி 2 கன்னட பாடல்களை பயன்படுத்தியதாக பதிப்புரிமைச் சட்டம் 1957, பிரிவு 63-ன் கீழ் பதிப்புரிமை மீறல் தொடர்பாக ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எம்ஆர்டி மியூசிக் நிறுவனத்தின் பங்குதாரரான நவீன் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரில், “ரக்‌ஷித் ஷெட்டி தான் தயாரிக்கும் படத்துக்காக ‘காலி மாது’ படத்தில் இடம்பெற்ற ‘நியாய எல்லிடே மற்றும் ஓம்மே நின்னான்னு’ ஆகிய பாடல்களை பயன்படுத்த அனுமதி கோரி எங்கள் இசை நிறுவனத்தை அணுகினார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, அமேசான் ப்ரைமில் ‘பேச்சிலர் பார்ட்டி’ படம் பார்க்கும்போது, அதில் அனுமதியின்றி எங்களின் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

ரக்‌ஷித் ஷெட்டி மீதான காப்புரிமை மீறல் புகாரில் சிக்குவது இது முதன்முறை அல்ல. முன்னதாக, லஹரி மியூசிக்கின் (Lahari Music) நிறுவனர் லஹரி வேலுவிடம் அனுமதி பெறாமல் அவர்களுக்கு நிறுவனத்துக்குச் சொந்தமான பாடலை 2016-ல் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தில் பயன்படுத்தியதாக ரக்‌ஷித் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும், அது தொடர்பான சட்டப் போராட்டம் 4 ஆண்டுகள் நடைபெற்று வந்தது. பின்னர் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x