Published : 13 Apr 2024 06:40 PM
Last Updated : 13 Apr 2024 06:40 PM

பிவிஆர் Vs கேரள தயாரிப்பாளர்கள் - மலையாள படங்கள் ‘திரை நிறுத்தம்’ பின்னணி என்ன?

திருவனந்தபுரம்: ‘ஆவேஷம்’, ‘வருஷங்களுக்கு சேஷம்’, ‘ஜெய் கணேஷ்’ ஆகிய மலையாள படங்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நிலையில், அதை எதையுமே பிவிஆர் சினிமாஸ் தனது திரையரங்குகளில் திரையிடவில்லை. அத்துடன் ஏற்கெனவே திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த ‘ஆடுஜீவிதம்’ உள்ளிட்ட மலையாள படங்களையும் நீக்கியுள்ளது. என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.

மோதலுக்கு என்ன காரணம்? - திரையரங்குகளில் Qube, UFO, PXD, TSR ஆகிய ஃபார்மெட்களில் திரைப்படங்களை திரையிடுவதற்கு விபிஎஃப் எனப்படும் ‘Virtual Print Fee’ கட்டணத்தை மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து பெறுகின்றன. இந்தக் கட்டணம் அதிகமாக இருப்பதாக தயாரிப்பாளர்களும், விநியோகஸதர்களும் குற்றம் சாட்டிவந்தனர். ஆனால், அவற்றை மல்டிப்ளக்ஸ் நிறுவனங்கள் காது கொடுத்து கேட்கவில்லை.

இதற்கு மாற்றாக அண்மையில் கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (KFPA), ‘பிடிசி’ எனப்படும் ‘Producers Digital Cinema’ (PDC) என்ற முறையை அறிமுகப்படுத்தியது. இந்த ஃபார்மெட்டை பயன்படுத்தி திரையிட வேண்டும் என மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியது. இதற்கு பிவிஆர் சினிமாஸ் மறுப்பு தெரிவித்ததால், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் - பிவிஆர் நிறுவனத்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

பிவிஆர் திரையரங்குகளில் நீக்கப்பட்ட மலையாள சினிமா: இதனையடுத்து, இந்தியா முழுவதும் உள்ள பிவிஆர் திரையரங்குகளில் மலையாள திரைப்படங்கள் நீக்கப்பட்டன. ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ தொடங்கி ‘ஆடுஜீவிதம்’ மற்றும் தற்போது வெளியான ‘ஆவேஷம்’, ‘வருஷங்களுக்கு சேஷம்’ என எந்தப் படமும் திரையிடப்படவில்லை.

இது தொடர்பாக திரையரங்குகளில் போராட்டம் நடத்தப்போவதாக ‘ஆடுஜீவிதம்’ பட இயக்குநர் ப்ளஸ்ஸி தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், “விபிஎஃப் கட்டணம் செலுத்தப்பட்டும் எனது திரைப்படம் பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனக்கு எந்த வித மின்னஞ்சலோ, தகவலையோ சொல்லாமல் திடீரென்று படத்தை திரையரங்குகளிலிருந்து நீக்கியுள்ளனர். இதனால் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு என்ன? - இது தொடர்பாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கூட்டம் நடைபெற்றது. இதில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்களை திரையிடாததால் ஏற்பட்ட நஷ்டத்தை பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி உன்னிகிருஷ்ணன், “இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் பேசியுள்ளோம். பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இனி இந்த விபிஎஃப் கட்டணம் திரையரங்குகளில் இருக்காது. ஹாலிவுட் படங்கள் இங்கே திரையிடப்படும்போது அவை விபிஎஃப் கட்டணத்தை செலுத்துவதில்லை.

இதே பிவிஆர் ஹாலிவுட் படங்களை திரையிட வேண்டுமென்றால், விபிஎஃப் கட்டணத்தை செலுத்துங்கள் என அந்த தயாரிப்பாளர்களிடம் கேட்பார்களா?. பிவிஆருக்குச் சொந்தமான திரையரங்குகளில் பிற மொழிப் படங்களை மலையாளத்தில் வெளியிடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x