Last Updated : 05 Apr, 2024 04:20 PM

1  

Published : 05 Apr 2024 04:20 PM
Last Updated : 05 Apr 2024 04:20 PM

‘Family Star’ Review: எப்படி இருக்கிறது இந்த ‘கிரிஞ்சு’ ஸ்டார்?!

இரண்டு அண்ணன்கள், இரண்டு அண்ணிகள், அவர்களுடைய நான்கு குழந்தைகள், ஒரு வயதான பாட்டி என ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தையே ஒற்றை ஆளாக சுமக்கிறார் கோவர்தன் (விஜய் தேவரகொண்டா). ஆதார் கார்டுகளையே சீட்டுக் கட்டைப் போல தூக்கிக் கொண்டு போகும் அளவுக்கு இவ்வளவு பெரிய குடும்பத்தில் பணக் கஷ்டமும், சில பல சிக்கல்களும் இருக்கின்றன.

கோவர்தனின் வீட்டு மாடியில் வாடகைக்கு குடி வருகிறார் கல்லூரி மாணவி இந்து (மிருணாள் தாக்கூர்). தன் குடும்பத்தில் ஒருவராக பழகும் இந்து மீது தேவரகொண்டாவுக்கு காதல் அரும்புகிறது. இருவருக்கும் இடையே காதல் மலரும் தருணத்தில் இந்துவைப் பற்றிய ஓர் உண்மையை தெரிந்து கொள்கிறார் கோவர்தன். இது இருவருக்கும் இடையிலான காதலை முறிப்பது மட்டுமின்றி, நாயகன் தன் குடும்பத்துக்காக வேறு சில முடிவுகளையும் எடுக்க காரணமாக அமைகிறது. கோவர்தன் எடுத்த முடிவுகளால் நடந்தது என்ன? நாயகன் - நாயகி இருவரும் கடைசியில் சேர்ந்தார்களா? - இதுதான் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் திரைக்கதை.

’கீத கோவிந்தம்’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த விஜய் தேவரகொண்டா - பரசுராம் கூட்டணி மீண்டும் ஒருமுறை ஒன்று சேர்ந்துள்ளது. ரொமான்ஸ், மசாலா, இசை என மூன்றும் சரியான விகிதத்தில் அமைந்த ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்த ‘கீத கோவிந்தம்’ கொடுத்த இந்தக் கூட்டணி இம்முறை பெரியளவில் சறுக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தின் கதையை எப்படி விஜய் தேவரகொண்டாவிடம் சொல்லி இயக்குநர் சம்மதிக்க வைத்தார் என்பதே ஓர் ஆச்சர்யமான விஷயம். காரணம், 70,80-களில் வந்து நொந்து போன ஒரு அரதப் பழைய டெம்ப்ளேட் கதை. கதைதான் பழையது என்றால் திரைக்கதையில் ஒரு பேச்சுக்கு கூட சுவாரஸ்யம் என்ற ஒரு வஸ்து இல்லை.

படத்தின் தொடக்கத்தில் மிருணாள் சில பெண்களிடம் ப்ளாஷ்பேக்கை சொல்லத் தொடங்குகிறார். நாயகனை பற்றியும், அவர் குடும்பத்துக்காக செய்யும் விஷயங்களை பற்றி பெருமையாக சொல்லும்போது அந்தப் பெண்கள் ஆச்சர்யப்பட, ‘வேறு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இரும்பை வளைக்க வேண்டுமா?” என்று மிருணாள் கேட்பதோடு படத்தின் டைட்டில் கார்டு வருகிறது. பரவாயில்லையே... தெலுங்கு சினிமாவின் பல்லாண்டு கால நாயக பிம்பங்களை இப்படம் சுக்கு நூறாக உடைக்கப் போகிறதோ என்ற ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தால்...

அடுத்தக் காட்சியிலேயே தாதா ஒருவரிடம் பஞ்ச் டயலாக் பேசி உண்மையிலேயே இரும்பை வளைக்கிறார் ஹீரோ. ஸ்ஸ்ஸப்பா.. இதுக்கு அந்த பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்று வசனம் நினைவுக்கு வந்ததை தடுக்க இயலவில்லை.

படம் தொடங்கியது முதலே எந்த இடத்திலும் ஒட்டாமல் பயணிக்கிறது. நாயகனின் குடும்பத்துக்கு பணக் கஷ்டம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தோசை மாவை கூட கண்ணாடி போல மெல்லியதாக சுடும் அளவுக்கு நாயகன் சிக்கனமாக இருக்கிறார். ஆனால், அதற்கான எந்த நியாயமும் படத்தில் வைக்கப்படவே இல்லை. படம் முழுக்கவே அவர்கள் குடும்பம் ஒரு எலைட் ஏழைக் குடும்பமாகவே காட்சிப்படுத்தப்படுகிறது.

இது ஒருபுறமென்றால், நாயகி மிருணாள் பாத்திர வடிவமைப்பு அதற்கு மேல், அவர் முதலில் யார் என்பதிலேயே குழப்பம். பெரிய கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியின் சிஇஓ என்று பின்னர் சொல்கிறார்கள், ஆனால் தனது துறைக்கு சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு பிஹெச்டிகாக நாயகனை பற்றிய ஆய்வுக் கட்டுரை எழுதிக் கொண்டிருப்பதாகவும் காட்டுகிறார்கள்.

தெலுங்கு சினிமாவில் ‘நன்றாக’ நடிக்கக் கூடிய ஒருசில நடிகர்களில் விஜய தேவரகொண்டாவும் ஒருவர். அவர் ஆரம்பகட்டங்களில் நடித்த திரைப்படங்கள் ‘டாக்ஸிக்’ தன்மையை கொண்டிருந்தாலும், அவரது நடிப்புத் திறனுக்கு அவை நல்ல தீனியாக அமைந்தன. ஆனால் தொடர் விமர்சனங்களுக்குப் பிறகு தனது ரூட்டை மாற்றிக் கொண்ட தேவரகொண்டாவுக்கு இதுபோன்ற ‘கிரிஞ்சு’ படங்களாக அமைவது துரதிர்ஷ்டம். படத்தில் பல இடங்களில் அவரது நடிப்பு ஓவர்டோஸ் ஆகவே தெரிந்தது

மிருணாள் தாக்கூருக்கு நடிக்க பெரிதாக வாய்ப்பு இல்லை என்றாலும், ஒவ்வொரு பிரேமிலும் கண்களை நகர்த்த முடியாத அளவுக்கு வசீகரிக்கிறார். அபிநயா, வாசுகி ஆனந்த், ரோகினி ஹட்டன்கடி, திவ்யான்ஷா கவுசிக் என யாருடைய கதாபாத்திரமும் அழுத்தமாக இல்லை. இரண்டாம் பாதியில் வரும் வெண்ணிலா கிஷோர் வழக்கம்போல சிரிப்பு வராத காமெடி செய்து எரிச்சலூட்டுகிறார்.

விஜய் தேவரொண்டாவின் பழைய படங்கள் நேரடியாக டாக்ஸிக் கருத்துகளை கொண்டவை என்றால் இதில் வாழைப்பழத்தில் ஊசி போல நுணுக்கமாக சில டாக்ஸிக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவுக்கு செல்லும் ஹீரோவை, அந்த நாட்டைச் சேர்ந்த நான்கு பெண்கள் காரில் கடத்திச் செல்ல முயற்சிப்பதும், அவர்களிடமிருந்து ஹீரோயின் ஹீரோவை காப்பாற்றவதும்... ஏமிரா இதி? என்று கேட்கத் தோன்றுகிறது.

விஜய் தேவரகொண்டா அழகானவர்தான். யாரும் இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக படம் முழுக்க அவருடைய அழகு, பராக்கிரமங்களை பறைசாற்றும் வசனங்களை வைக்க வேண்டுமா? ‘அவனை யார் பார்த்தாலும் கிஸ் அடிக்க வேண்டும்’ என்று தான் தோன்றும் என்று ஒரு காட்சியில் ஹீரோயின் சொல்கிறார். ஒன்றும் சொல்வதற்கில்லை.

காதல் காட்சிகளிலும் சரி, குடும்ப உறவுகள் குறித்த காட்சிகளிலும் சரி எந்த இடத்திலும் எமோஷனல் அம்சங்களே இல்லை. ‘ஃபேமிலி ஸ்டார்’ என்று தலைப்பு கொண்ட படத்தில் உணர்வுபூர்வமாக நெகிழ வைக்கும் ஒரு காட்சி கூட இல்லாமல் போனதுதான் முரண்.

கோபி சுந்தரின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை சுமார். கே.யு.மோகனனின் கேமராவில் ஒவ்வொரு காட்சியும் பளிச்சென்று இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா தொடர்பான காட்சிகள் ப்ரெஷ்சாக இருக்கின்றன.

மொத்தத்தில் முதல் பாதி குடும்ப உறவுகளையும் இரண்டாம் பாதி காதலையும் மையமாக கொண்ட படத்தில், குறிப்பிட்டு நினைவில் கொள்ளும்படியான ஒரு காட்சி கூட அமையவில்லை என்பது தான் உண்மை. சுவாரஸ்யமோ, நெகிழ்ச்சியான தருணங்களோ எதுவும் இன்றி வெறும் ‘கிரிஞ்சு ஸ்டார்’ ஆக வந்திருக்கிறது இந்த ‘ஃபேமிலி ஸ்டார்’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x