Published : 14 Mar 2024 06:10 PM
Last Updated : 14 Mar 2024 06:10 PM
திருவனந்தபுரம்: ஒரு திரைப்படம் வெளியான 48 மணி நேரத்துக்குள் திரைப்பட விமர்சகர்கள் தங்கள் விமர்சனங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கேரள உயர் நீதிமன்றத்தில், ‘ராஹேல் மாகன் கோரா’ (Rahel Makan Kora) படத்தின் இயக்குநர் உபைனி கொச்சி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், “திரையரங்குகளில் வெளியாகும் தங்களது புதிய படங்களுக்கு வேண்டுமென்றே தவறான விமர்சனங்கள் வழங்கப்படுகிறது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன், இந்த வழக்கில் அமிக்கஸ் கியூரியாக (நீதிமன்றத்துக்கு உதவும் நபர்) ஷியாம் பத்மன் என்பவரை நியமித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஷியாம் பத்மன் சினிமா விமர்சனங்கள் தொடர்பான தனது பரிந்துரைகளை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘திரைப்பட விமர்சகர்கள் ஒரு திரைப்படம் வெளியானதும் முதல் 48 மணி நேரத்துக்குள் தங்கள் விமர்சனங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று பரிந்துரைத்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தைக் கண்காணிக்க பிரத்யேக இணையதளத்தை உருவாக்க வேண்டும் எனவும், திரைப்படத்தை விமர்சனம் செய்பவர்கள் ஆக்கபூர்வமான கருத்தை எடுத்துரைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, சினிமா விமர்சனங்கள் கிளிக் பைட்டுக்களை நோக்கமாகக் கொண்டு வெளியிடக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT