Published : 05 Mar 2024 06:35 PM
Last Updated : 05 Mar 2024 06:35 PM
சென்னை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் 12 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 7 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை குவித்தது.
இதற்கு முக்கியக் காரணம் தமிழ் ரசிகர்களின் வரவேற்பு. ‘குணா’ குகையில் நடக்கும் கதையும், இளையராஜா இசையும் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படம் வெளியாகி 12 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்து வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரூ.100 கோடியில் தமிழக பார்வையாளர்களின் பங்கு முக்கியமானது. 11 நாட்களில் தமிழகத்தில் மட்டும் படம் ரூ.15 கோடியை வசூலித்துள்ளது.
மலையாளத்தில் வெளியான மோகன்லாலின், ‘புலிமுருகன்’, ‘லூசிஃபர்’ மற்றும் கடந்த ஆண்டு வெளியான ஜூட் ஆந்தனி ஜோசப்பின் ‘2018’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்திருந்தது. அந்த வகையில் தற்போது 4வது படமாக ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. அதிகபட்ச வசூல் சாதனையில் ‘2018’ படம் உலகம் முழுவதும் ரூ.175 கோடியுடன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வரவேற்பு: தமிழகம் முழுவதும் வெறும் 50 திரைகளில் மட்டுமே ஓடிக் கொண்டிருந்த ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தற்போது சுமார் 250 திரைகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திருச்சி போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பெரிய அளவில் எந்த ஒரு விளம்பரமோ, யூடியூப் நேர்காணல்களோ, பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழாக்களோ நடத்தாமல் முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களால் மட்டுமே இப்படத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஏறக்குறைய படம் பார்த்த அனைவருமே படக்குழுவினரை நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT