“இப்படி செய்திருக்க வேண்டும்” - ‘மலைகோட்டை வாலிபன்’ தோல்வி குறித்து லிஜோ ஜோஸ்
கொச்சி: ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்துக்கு வரும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மனம் திறந்துள்ளார்.
மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் புதிய படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’. இப்படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் வெளியான நாள் முதலே இப்படத்துக்கு கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகின.
இந்த விமர்சனங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறிருப்பதாவது: இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ளும்போது, அதை கொண்டாட வேண்டும் என்று சொல்லவில்லை. விமர்சனங்களும் வரவேற்கப்பட வேண்டியவைதான். ஆனால் படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் அது தொடர்பான விவாதங்கள் திசைமாறிச் சென்றன.
முதல் இரண்டு நாட்கள் வந்த கருத்துகள் எல்லாம், ‘எனக்கு படம் பிடிக்கவில்லை, எனவே மற்றவர்களும் இதனை பார்க்கக்கூடாது’ என்கிற ரீதியில் இருந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளால இத்தனை பேர் போட்ட உழைப்பு காணாமல் போய், மிக மோசமான மலையாளப் படம் என்ற பெயர் மட்டுமே எஞ்சியிருந்தது. அது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. அதனால் தான் நான் மீடியாவை அழைத்து, ஏன் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று விளக்கினேன். இப்படி நான் இதற்கு முன்பு செய்ததே இல்லை. ஒரு படத்துக்காக மக்கள் ஒருவர் மீது ஒருவர் கல்லெறிவதை நான் விரும்பவில்லை. நீங்கள் படம் பார்க்க விரும்பவில்லை என்றால் பார்க்காதீர்கள், ஆனால் மற்றவர்களையும் பார்க்க வேண்டாம் என்று கட்டாயப்படுத்தாதீர்கள்.
பார்வையாளர்கள் இப்படத்தைப் பற்றி புரிந்துகொள்ளு வகையில் இன்னும் விரிவான ஒரு டிரெய்லரை நாங்க வெளியிட்டிருக்க வேண்டும்” இவ்வாறு லிஜோ ஜோஸ் கூறியுள்ளார்.
