Published : 29 Jan 2024 04:14 PM
Last Updated : 29 Jan 2024 04:14 PM
கன்னித்தீவு, காமிக்ஸ் கதைகளில் வருவது போன்ற கற்பனை பாத்திரங்களைக் கொண்டு, இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கட்டி எழுப்பியிருக்கும் அவருக்கான உலகம்தான் இந்த 'மலைக்கோட்டை வாலிபன்'. மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’,‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, இம்முறை மோகன்லால் உடன் இணைந்ததால், மோலிவுட்டைப் போலவே தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா? என்பது கேள்விக்குறிதான்.
4 திசைகளிலும் யாராலும் தோற்கடிக்க முடியாத வீரன் மலைக்கோட்டை வாலிபன் (மோகன்லால்). தனது ஆசான் அய்யனார் (ஹரீஷ் பெராடி), அவரது மகன் சின்னபையன் (மனோஜ் மோசஸ்) ஆகியோர் தங்களது இரட்டை மாடு பூட்டிய வண்டி சகிதமாக ஊர் ஊராக பயணிக்கின்றனர்.இந்தப் பயணங்களின்போது, தென்படும் ஊர்களில் இருக்கும் வீரர்களை வென்று, அந்த ஊரின் வரலாற்றில் தனது பெயரை பதிப்பிக்கிறார் மலைக்கோட்டை வாலிபன். இப்படியான ஒரு பயணத்தில், நாட்டியக்காரி ரங்கப்பட்டினம் ரங்கராணியை (சோனாலி குல்கர்னி) சந்திக்கும் மலைக்கோட்டை வாலிபன் அவளை சமத்தகன் (டேனீஷ் சேட்) என்பவனிடமிருந்து காப்பாற்றுகிறார். இதனால், ரங்கராணியின் காதலும், சமத்தகனின் வஞ்சமும் மலைக்கோட்டை வாலிபனை நிழல்போலத் துரத்துகிறது. இந்த காதலும், வஞ்சமும் மலைக்கோட்டை வாலிபனை வீழ்த்துகிறதா? இல்லையா? என்பதுதான் படத்தின் திரைக்கதை.
பி.எஸ்.ரஃபீக் உடன் இணைந்து லிஜோ ஜோஸ் பெல்லிசேரி எழுதி, இயக்கியிருக்கும் இந்த 'மலைக்கோட்டை வாலிபன்' ஒரு கற்பனையான ஃபேண்டஸி டிராமா. லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் முந்தைய படங்களுடன் இப்படத்தை தூரத்தில் வைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. பலவீனமான கதையும், தட்டையான திரைக்கதையும் பல இடங்களில் தொய்வைத் தருகின்றன. லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இந்த கற்பனை கதையில் வேகமூம், விறுவிறுப்போ கொஞ்சம்கூட இல்லை. கதாப்பாத்திரங்கள், பழங்கால விதிமுறைகள், அப்போதைய சூழ்நிலைகளைக் கொண்டு இயக்குநர் விளையாடி பார்த்திருக்கிறார். அது பார்வையாளர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தாமல் இருக்க உதவும் என்று நம்பிய அவரது பேஃன்டஸி பிரம்மாண்டமும் இயக்குநருக்கு கைக்கொடுக்கவில்லை.
இந்தப் படத்தின் மிகச்சிறந்த பணியை செய்திருப்பது மது நீலகண்டனின் ஒளிப்பதிவுதான். ராஜஸ்தானின் பெரு மணல்வெளியை தன் கேமிரா வழியாக சலித்து பார்வையாளர்களின் கண்களில் நிரப்புகிறார் ஒளிப்பதிவாளர்.ஒவ்வொரு ஷாட் கம்போஸிங்கும் மிரட்சியைத் தருகிறது. க்ளைமேக்ஸ் காட்சிக்கு முன்பு வரும் அந்த திருவிழா காட்சியில் படத்தின் கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் தெறிக்க விட்டிருக்கின்றனர். ஏற்கெனவே படத்தின் கதை நத்தையைவிட மிகவும் மெதுவாக செல்கிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகள் கதைக்களத்தை விரைவாக கொண்டு செல்வதற்குப் பதிலாக அழகியல் என்ற பெயரில் படத்தை ஊர்ந்துப் போக செய்துவிடுகிறது. படத்தில் வரும் மிக நீள, நீளமான காட்சிகள், எல்லாம் லிஜோ கேட்டுக்கொண்டதால் ஒளிப்பதிவாளர் எடுத்துக் கொடுத்திருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது.
'லூசிஃபர்' படத்தில் ஒரு காட்சியில் காவல்துறை காரில் செல்ல அனுமதி மறுத்துவிடும். மோகன்லால் காரில் இருந்து இறங்கி செல்வார். அந்த காட்சி அவ்வளவு பெரிய மாஸான காட்சியாக இருக்கும். ஆனால், இந்தப்படம் முழுவதும் தேடினாலும் மோகன்லாலுக்கு அப்படியான ஒரு மாஸ் காட்சியும் இல்லாதது வருத்தம். மோகன்லாலும் தனது ஸ்டார் அந்தஸ்தை எல்லாம் மறந்து, இயக்குநரின் நடிகராக தன்னை ஒப்படைத்திருப்பதை உணர முடிகிறது. இதனால் மோகன்லாலிடம் கிடைக்க வேண்டிய குட்டிகுட்டியான கூஸ்பம்ப் மொமன்ட்ஸ்கள் மிஸ் ஆகியிருக்கிறது. ஹரீஷ் பெராடி, மனோஜ் மோசஸ், சோனாலி குல்கர்னி உள்பட படத்தில் வரும் தங்களது பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக, டேனீஷ் சேட் என்ற கன்னட நடிகர் வித்தியாசமான தனது பாத்திரத்தின் மூலம் கவனிக்க வைத்திருக்கிறார்.
பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஆனால், மிக மெதுவாக நகரும் லிஜோவின் கற்பனை கோட்டையை பாடல்கள் இன்னும் பலவீனமாக்கி விடுகின்றன. ஆக்சன் காட்சிகள் என்ற பெயரில் மோகன்லால் அக்ரோபாடிக்ஸ் செய்வதெல்லாம் ரசிகர்களுக்கு நகைப்பை வரச்செய்கிறது. அதைவிட எந்தவிதமான அழுத்தமான காரணங்களும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கும் அந்த அம்பத்தூர் கோட்டை சண்டைக்காட்சி வியப்பைத் தருவதற்குப் பதிலாக விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருக்கிறது. லிஜோ ஒரு பிரம்மாண்டமான படத்தை கலைநயத்துடன் சொல்ல முயற்சித்திருக்கிறார். வலுவான கதை இல்லாத காரணத்தால் பிரம்மாண்டமும், கலைநயமும் பொருந்தாமல் போக அது பார்வையாளர்களுக்கு விரக்தியை தந்திருக்கிறது.
சுவாரஸ்யமான கதையும், திரைக்கதையும் இல்லாமல் ப்ரேம்களின் வழியே கதை சொல்ல முயற்சித்திருக்கும் லிஜோவின் முயற்சி ஒர்க்அவுட் ஆகவில்லை. படத்தின் இறுதிக்காட்சியில் பொடி போல ஒரு ட்விஸ்ட்டைத் தூவி, அதை இந்த படத்தின் இரண்டாவது பாகத்துக்கான லீடாக கொடுக்கிறார் இயக்குநர் லிஜோ. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தை நோக்கி பார்வையாளர்களை ஈர்ப்பதற்கான விறுவிறுப்பையும், எதிர்பார்ப்பையும் படத்தின் முதல் பாகத்தில் ஏற்படுத்த இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தவறிவிட்டார் என்பதே கசப்பான உண்மை.
மொத்தத்தில், காலம் எதையும் குறிப்பிடாமல், ஆண்கள் கள்ளை குடித்துக்கொண்டு ஊர்ஊராக சென்று சண்டை போட்டபடி தங்களது வீரத்தை நிரூபித்துக் கொண்டும், பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிந்தபடி ஆண்களை கவர்ந்தபடி, நாம் பலமுறை கேட்டு சலித்துப் போன 'ஒரு ஊர்ல' என தொடங்கும் வகையறாதான் இந்த 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படமும் . ‘கண் கண்டது நிஜம்; காணாதது பொய், நீ கண்டதெல்லாம் பொய். இனி காணப்போவது நிஜம்’படத்தில் மோகன்லால் பேசும் வசனம் என்று பார்த்தால், நிஜமாகவே இயக்குநர் பார்வையாளர்களுக்கு சொல்லும் செய்தி இதுவாகத்தான் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT