Published : 24 Nov 2023 05:35 PM
Last Updated : 24 Nov 2023 05:35 PM
காதல் என்பது விடுவித்தல். தன் துணையின் தேர்வை நோக்கி அவரைச் செல்ல அனுமதித்தல். தீர்க்க முடியாத பிரச்சினைகளைச் சுமந்து பாரமாக வாழ்வதிலிருந்து மீள்தல் என்கிறது ‘காதல் - தி கோர்’.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் மூலம் சம்பிரதாய சடங்குகளால் சிறகொடித்து கிச்சனுக்குள் சிதைக்கப்படும் பெண்களின் பெருந்துயரை விமர்சித்த இயக்குநர் ஜியோ பேபி, இம்முறை காதலுக்குள் இருக்கும் வரையறைகளை புதிய பரிமாணங்களில் அணுகும் படைப்பை கொண்டு வந்திருக்கிறார். கேரளத்தின் டீகோய் கிராமத்தில், நடுத்தர வயது தம்பதிகளான மேத்யூ தேவஸி (மம்முட்டி) ஓமணா (ஜோதிகா) மற்றும் மேத்யூவின் தந்தையும் வசித்து வருகின்றனர். இத்தம்பதிகளின் ஒரே மகளான ஃபெமி (அனகா மாயா ரவி) கல்லூரி படிப்பை விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். மேத்யூவின் வீட்டைப்போலவே குடும்பத்திலும் கனத்த மவுனம் நிரம்பிக் கிடக்கிறது.
இடதுசாரிக் கட்சியின் ஆதரவாளரான மேத்யூ, கிராம பஞ்சாயத்தில் உள்ள 3-வது வார்டின் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார். இத்தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும்போது, மேத்யூவிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுகிறார் ஓமணா. அவர் தாக்கல் செய்யும் மனுவில், மேத்யூ ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதால் விவாகரத்து கோருவதாக குறிப்பிட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிறது. தேர்தல் நேரத்தில் எழும் இந்தக் குடும்ப பிரச்சினை, சமூகத்தில் தனக்கு ஏற்படபோகும் விளைவுகளின் பாதிப்புகள் குறித்த எண்ணம் மேத்யூவை கடுமையாக பாதிக்கிறது. இறுதியில் இருவரும் விவாகரத்து பெற்றனரா, தன்பால் ஈர்ப்பாளரான மேத்யூஸ் தேர்தலில் வென்றாரா, இல்லையா எனபதே திரைக்கதை.
ஆதர்ஷ் சுகுமாரன், பால்சன் ஸ்கரியாவின் எழுத்தை படமாக்கியிருக்கிறார் ஜியோபேபி. சென்சிட்டிவான இந்தப் பிரச்சினையின் கனம் உணர்ந்து, வசனங்களை சுருக்கி, வெறும் உணர்வுகளின் வழியே அணுகியிருப்பது முழுமையான சினிமா அனுபவம். எந்த பிரச்சார வசனங்களோ, தன்பால் ஈர்ப்பாளர்களை புகழ்ந்தோ, இகழந்தோ, ஹைப் ஏற்றி பாடம் எடுக்காமல் படமாக எடுத்திருப்பது பலம். முதல் பாதியில் தன்பால் ஈர்ப்பாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தாமலேயே பார்வையாளர்களை புரிந்துகொள்ள வைத்தது, அதற்கு பின் வரும் காட்சிகளில் கதை போக்கிலேயே அதனை வெளிப்படுத்தியிருப்பது தேர்ந்த திரைமொழி.
தன்பாலின ஈர்ப்பாளர்களாக அடையாளப்படுத்தப்படும் இருவர், சேர்ந்து பேசிக்கொள்ளும் ஒரு வசனமோ, தருணமோ படத்தில் இருக்காது. ஆனால், அவர்களுக்குள்ளான அந்த உறவின் அடர்த்தி கச்சிதமாக கடத்தப்பட்டிருக்கும். அதுவும் இடைவேளையின்போது இருவரும் சந்தித்துக்கொண்டு பேசாமல் நகர்ந்துசெல்லும் காட்சியில் உணர்வுமொழியில் நம்முடன் உரையாடும்.
படத்தில் மற்றொரு சுவாரஸ்யமான இடம், அதன் கோர்ட் ரூம் டிராமா. சமூகத்தின் மனநிலையை பிரதிபலிக்கும் அந்தக் காட்சிகளில் அடர்த்தியான வசனங்கள் தேவையான அளவில் எழுதப்பட்டிருக்கும். உதாரணமாக, ஓமணாவிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர், ‘அவர் உங்களிடம் ஆக்ரோஷமாகவோ, வன்முறையுடனோ நடந்துகொண்டாரா?’ என கேட்கும்போது, குறுக்கிடும் எதிர்தரப்பு வழக்கறிஞர், “தன்பால் ஈர்ப்பாளர்கள் அன்பும், கருணையும் காட்டாத இரக்கமற்றவர்கள் என கருதுகிறீர்களா?” என கேட்பார். இப்படியாக பொதுப்புத்தி கேள்விகளுக்கான பதில்கள் உரையாடல்களாக வெளிப்படும்.
எல்லாவற்றையும் தாண்டி, காதல் என்பது சகித்துக்கொண்டு கஷ்டப்பட்டு வாழ்வதல்ல என்பதை படம் நிறுவும் இடம் முக்கியமானது. மம்மூட்டி - ஜோதிகா இடையே எந்த பிரச்சினையுமில்லை. சொல்லப்போனால் மம்மூட்டிக்கு ஜோதிகாவை பிரிய மனமில்லை. ஆனால், இங்கே பாதிக்கப்பட்டவரான ஓமணா (ஜோதிகா) கதாபாத்திரம் 20 ஆண்டுகளில் வெறும் 4 முறை மட்டுமே உறவில் இருந்த மேத்யூஸை பிரிய முடிவெடுத்து, “நான் என்னை மட்டும் மீட்டுக்கொள்ளவில்லை, உன்னையும் சேர்த்து தான் மீட்டெடுக்கிறேன்” என்று கூறுவதன் வழியே மம்மூட்டியை அவரது அடையாளத்துடன் அவருக்கு பிடித்தமானவருடன் வாழ வழி செய்கிறது.
உண்மையில் அந்த சுதந்திரமும் விடுபடுதலும்தான் காதல். கஷ்டப்பட்டு சகித்து வாழ்வதைக் காட்டிலும், மனமுவந்து விலகி பிடித்த வாழ்க்கையின் தேர்வு தான் ‘காதலின் மையம்’ என்கிறது படம். அதேபோல “கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும்” என பழமைவாத சொல்லாடல் மீது ஓங்கி அறைகிறது.
கவிதையைப்போல நகரும் இடைவேளையும், க்ளைமாக்ஸ் காட்சியும் சிறந்த காட்சியனுபவ ரசனை. சாலு கே.தாமஸின் ஸ்டாட்டிக் ஃப்ரேம்கள் பல கதைகளைச் சொல்கிறது. தொடக்கத்தில் வரும் சர்ச் காட்சியிலேயே தனித்தனியாக பிரிந்து செல்லும் மேத்யூஸ் - ஓமணா தம்பதி, அப்பாவை பற்றிக்கொண்டு மகன் அழும்போது வரும் வைடு ஆங்கிள், இறுதிக்காட்சியின் சர்ப்ரைஸ் என மனிதர்களுடன் மனிதர்களாகவே மாறி அருகில் நின்று கதை சொல்கிறது கேமரா.
சூப்பர் ஸ்டார் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் நடிப்பது பெரும் கனவு. நடிப்பதுடன் அதை தயாரித்தும் கனவுக்கு உயிர்கொடுத்திருக்கும் மம்மூட்டியின் முயற்சி பாராட்டத்தக்கது. தன்பாலின அடையாளத்துடன் நிகழ்த்தும் போராட்டம், விருப்பமான வாழ்க்கையிலிருந்து விலகியிருக்கும் தவிப்பு, கட்டாய திருமணத்தால் பெண்ணை வதைத்துவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியில் ‘கடவுளே’ என அழுவதாகட்டும், தந்தையை பற்றிக்கொண்டு கதறும்போதும் கலங்கடிக்கிறார் மம்மூட்டி. இருண்ட வாழ்க்கையிலிருந்து மீள வழி தேடும் பெண்ணாக இறுக்கமான முகபாவனையுடன் நடிப்பில் அழுத்தம் கூட்டுகிறார் ஜோதிகா.
‘விவாகரத்தை வாபஸ் வாங்கிட்டா அது எனக்கு நானே செஞ்சுக்கிற அநீதி’ என தனக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ளும் தெளிவான கதாபாத்திர வடிவமைப்பிலும், அதே சமயம் கணவனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இடங்களிலும் கவர்கிறார். அதிகம் பேசாமலேயே தனது அப்பாவியான நடிப்பிலும், தயங்கி உணர்வுகளை வெளிப்படுத்தும் இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார் தங்கன் கதாபாத்திரத்தில் நடித்த ஜிசு சென்குப்தா.
வழக்கறிஞர்களாக வரும் சின்னு சாந்தினி, முத்துமணியும் சிறிது நேரம் வந்தாலும் சிறப்பான பங்களிப்பை செலுத்துகின்றனர். இறுதியில் வரும் பாடலில் பார்வையாளர்களுக்கு ஃபீல்குட் உணர்வை கொடுத்தனுப்பும் மாத்யூஸ் புலிக்கன், லேசான மழைத்தூரல் போல படம் முழுவதும் பின்னணி இசையில் இதம் சேர்ப்பது பலம்.
20 வருடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் மணவிலக்கு கேட்பதற்கு சொல்லும் காரணத்தில் வலுவில்லை. மதங்களும், மக்களும் தன்பாலின ஈர்ப்பாளர்களை ஏற்றுக்கொண்டு ஆதரவளித்து வெற்றிப்பெறச்செய்வது யதார்த்ததில் எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியும் எழாமலில்லை. ஆங்காங்கே சின்ன சின்ன லாஜிக்குகள் இடித்தாலும், சொல்ல வந்ததை தேர்ந்த திரைமொழியில் பதியவைக்கிறது ‘காதல் - தி கோர்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT