Published : 08 Nov 2023 09:37 PM
Last Updated : 08 Nov 2023 09:37 PM
டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘அத்ரிஷ்ய ஜலகங்கள்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் டோவினோ கவனம் பெறுகிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ள மலையாள படம் ‘அத்ரிஷ்ய ஜலகங்கள்’ (Adrishya Jalakangal). நிமிஷா சஜயன், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ரிக்கி கேஜ் இசையமைத்துள்ளார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டோவினோ தாமஸ் தயாரித்துள்ளார். போரை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - இதுவரை பார்த்திராத புதுவிதமான டோவினோ தாமஸின் கருநிறத் தோற்றம் கவனம் பெறுகிறது. அவரது மனநலம் பாதிக்கப்பட்டது போன்ற உடல்மொழியும், பயந்த சுபாவமும் படத்தின் தரத்தை உணர்த்துகின்றன. ட்ரெய்லரின் முதல் காட்சியில் இந்திரன்ஸிடம் ‘உங்கள் பெயர் என்ன?’ என கேட்கிறார் டோவினோ. அதற்கு அவர், ‘இறந்த பின்பு பெயர் தேவையா? எல்லோரும் டெட்பாடி என்று தான் அழைப்பார்கள்’ என கூற அவரின் பிரேதம் காட்டப்படுகிறது.
படம் ஏதோ வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருப்பதை காட்சிகள் உறுதிபடுத்துகின்றன. அடுத்தடுத்து வரும் போர்ச் சூழல் காட்சிகளும், அதற்கு எதிரான குரலும், இடையே வரும் காதலும், பின்னணி இசையும் படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டுகின்றன. டோவினோ தாமஸின் நடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் என தெரிகிறது. படம் வரும் நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் குறித்து பேசியுள்ள படத்தின் இயக்குநர், “இது போருக்கு எதிரான திரைப்படம். மேலும்,வாழ்க்கை, மரணம், பயம், நம்பிக்கை, உதவியற்ற தன்மை, அன்பு, வெறுப்பு, கனவுகள் போன்ற உணர்ச்சிகள் மற்றும் சூழ்நிலைகளை குறித்தும் படம் ஆழமாக பேசும். குறிப்பாக சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான குரலாக ஒலிக்கும்” என்றார். ட்ரெய்லர் வீடியோ;
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT