Published : 13 Oct 2023 05:41 PM
Last Updated : 13 Oct 2023 05:41 PM

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் மரணம்

கோழிக்கோடு: இரண்டு தேசிய விருதுகளை வென்ற மலையாள தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் வயது மூப்பு தொடர்புடைய உடல்நல பாதிப்பால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கிரஹலட்சுமி புரொடக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் 1977-ம் ஆண்டு முதல் படங்களை தயாரித்து வந்தவர் தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன். இருபதுக்கும் மேறப்பட்ட மலையாள படங்களை தயாரித்துள்ளார். இதில் ‘ஒரு வடக்கன் வீரகதா’, ‘அசுவிண்டே அம்மா’, ‘தூவல் கொட்டாரம்’ உள்ளிட்ட படங்கள் இவர் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், 1996-ல் வெளியான இவரின் ‘கானாக்கினாவு’ (Kaanaakkinaavu) படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் தத் விருது வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு வெளியான ‘சாந்தம்’ (Shantham) திரைப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது. தொழிலதிபரான இவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2011-ல் கோழிக்கோடு வடக்கு தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு போட்டியிட்டார். மேலும், மாத்ருபூமியின் இயக்குநராகவும் சில வருடங்கள் இருந்தார்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நலப் பிரச்சினைகளால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று அதிகாலை காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x