Published : 30 Nov 2017 01:39 PM
Last Updated : 30 Nov 2017 01:39 PM
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்குப் பிடிக்காததை அழிக்க எந்த எல்லைக்கும் போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என 'எஸ் துர்கா' படத்தின் இயக்குநர் சனல் குமார் சசிதரன் பதிவிட்டுள்ளார்.
48-வது சர்வதேச திரைப்பட விழாவில் 'எஸ் துர்கா' திரைப்படத்தின் திரையிடல் ஆரம்பம் முதலே சர்ச்சையை கிளப்பியது. படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழு, எஸ் துர்கா படத்தை தேர்வு செய்தும், இறுதிப் பட்டியிலிலிருந்து அந்தப் படத்தை தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நீக்கியது. இதைத் தொடர்ந்து நடுவர் குழுவில் இருந்த பலர் ராஜினாமா செய்தனர்.
தொடர்ந்து கேரள உயர் நீதிமன்றத்தில் சசிதரன் வழக்கு தொடர்ந்தார். படத்தின் தணிக்கை செய்யப்பட்ட பிரதி நீதிபதிகள் குழுவுக்கு திரையிடப்பட்டது. பின் அவர்கள் படத்தை திரையிடுமாறு திரைப்பட விழா நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர். ஆனால் விழாவின் கடைசி நாள் அன்று படத்தின் தலைப்பு குறித்து தணிக்கைத் துறை பிரச்சினை எழுப்பியதால் படம் திரையிடப்படவில்லை. செவ்வாய்க்கிழமை பட விழா முடிந்த நிலையில், தனது ஆதங்கத்தை ஃபேஸ்புக்கில் சசிதரன் பதிவிட்ட்டுள்ளார்.
"நான் ஒரு துளி கூட சந்தோஷமாக இல்லை. இன்னொரு வகையில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் அதிகாரத்தில் இருந்தால் என்ன நடக்கும் என்று கேட்ட பலருக்கும் எனது படம் அவர்களால் என்ன பிரச்சினை வரும் என்பதை புரியவைத்துள்ளது.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்குப் பிடிக்காததை அழிக்க எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதை எனது படம் நிரூபித்துள்ளது. வேண்டுமென்றால் அவர்களால் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யவோ, நீதித்துறையை புறக்கணிக்கவோ கூட முடியும். நீதிமன்றம் சொல்வதை அவர்கள் பின்பற்றமாட்டார்கள் ஆனால் நிர்வாகிகளுக்கு எதுவும் ஆகாது என அவர்களிடம் உத்தரவாதம் தர முடியும். மிகவும் ஆபத்தான செய்திகள் இவை.
கடந்த இரண்டு மூன்று நாட்களில் இந்த அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவு என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பலரை நான் பார்த்துவிட்டேன். எனது படத்துக்கு எதிராக அமைச்சகம் நடத்திய விளையாட்டினால் ஏமாற்றமும் மன அழுத்தமும் அடைந்துள்ளேன்" என்று சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT