Published : 27 Jul 2023 04:45 AM
Last Updated : 27 Jul 2023 04:45 AM
ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ், பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், உட்படப் பலர் நடிக்கின்றனர். அடுத்து மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘கல்கி 2829 கி.பி’ படத்தில் நடித்துவருகிறார். இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்படப் பலர் நடிக்கின்றனர்.
இதையடுத்து மாருதி இயக்கும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்களை முடித்தபின் அவர், பிருத்விராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘சலார்’ படப்பிடிப்பின்போது பிருத்விராஜ், மாபெரும் பட்ஜெட் தேவைப்படும் கேங்ஸ்டர் கதை ஒன்றை அவருக்குச் சொன்னதாகவும் அதைக் கேட்ட அவர் கண்டிப்பாகப் பண்ணலாம் என்று உறுதிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பிருத்விராஜ், மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ படம் மூலம் இயக்குநர் ஆனார். இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. அடுத்து மோகன்லால் நடிப்பில் ‘புரோ டாடி’ என்ற படத்தையும் இயக்கினார். இதுவும் வெற்றிபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT