Published : 21 Jul 2023 11:46 AM
Last Updated : 21 Jul 2023 11:46 AM

“உம்மன் சாண்டி யார்?” - சர்ச்சைப் பேச்சால் நடிகர் விநாயகன் மீது வழக்குப் பதிவு

எர்ணாகுளம்: மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மலையாள நடிகர் விநாயகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கடந்த ஜூலை 18-ஆம் தேதி அன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மறைவுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். கேரள அரசு சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கேரள அரசின் இந்த அறிவிப்பு குறித்து மலையாள நடிகர் விநாயகன் சர்ச்சையாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் ‘யார் இந்த உம்மன் சாண்டி? அவர் இறந்ததற்கு எதற்கு மூன்று நாள் விடுமுறை. அவர் நல்லவர் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், நான் சொல்ல மாட்டேன்” என்று விநாயகன் பேசியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையான நிலையில், இந்த வீடியோவை விநாயகன் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கினார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் விநாயகன் மீது காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், கொச்சியில் உள்ள விநாயகனின் வீட்டில் மர்ம நபர்கள் சிலர் நேற்று (ஜூலை 20) கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x