Published : 08 Nov 2017 03:01 PM
Last Updated : 08 Nov 2017 03:01 PM
'போகன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலிருந்து ரவிதேஜா விலகியுள்ளார். இதனால் சர்ச்சை உருவாகியுள்ளது.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'போகன்'. இமான் இசையமைப்பில் உருவான இப்படத்தை பிரபுதேவா தயாரித்திருந்தார். ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. தமிழில் 'போகன்' படத்தை இயக்கிய லட்சுமண் தெலுங்கு ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தமானார். நாயகனாக ரவிதேஜா நடிப்பது உறுதியனது. அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமானார். ராம் தல்லூரி தயாரிப்பதாக உறுதியானது.
இந்நிலையில் ரவிதேஜா நடிப்பில் வெளியான 'ராஜா தி கிரேட்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, தற்போது ரீமேக்கில் நடித்தால் சரியாக இருக்காது என்று 'போகன்' படத்திலிருந்து விலகிவிட்டார் ரவிதேஜா. இதனால் ரவிதேஜாவுக்காக கதையில் சில மாற்றங்கள் செய்து, முழுமையாக எழுதி முடித்திருப்பதால் இயக்குநர் லட்சுமண் கடும் அதிர்ச்சியடைந்தார்.
பாபி இயக்கத்தில் ரவிதேஜா நடிக்கவுள்ள புதிய படத்தின் தயாரிப்பாளராக ராம் தல்லூரி மாறிவிட்டார். இதனால், 'போகன்' தெலுங்கு ரீமேக் வேறொரு நாயகனை வைத்து தொடங்கப்படுமா அல்லது ரீமேக் எண்ணம் கைவிடப்படுமா என்று விரைவில் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT