Published : 07 Oct 2017 12:33 PM
Last Updated : 07 Oct 2017 12:33 PM
கோவாவில் நேற்று நள்ளிரவு நாக சைதன்யா - சமந்தா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
பிரபல தெலுங்கு நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் பேரனும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் ‘ஏம் மாய சேஸாவே’ (தமிழில், விண்ணைத் தாண்டி வருவாயா) படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவரும் காதலிக்க தொடங்கினர். அதன் பின்னர் இந்த ஜோடி, மேலும் 3 படங்களில் நடித்தனர். இதனால் இவர்களது காதல் வளர்ந்தது. ஆனால் வழக்கம்போல் ‘நாங்கள் காதலிக்கவில்லை’ என கூறி வந்தனர். இந்த விஷயம் இரு வீட்டாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. பின்னர் இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது திருமணம் நேற்று நள்ளிரவு கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சுமார் 170 பேர் மட்டுமே ஹைதராபாத்திலிருந்து தனிவிமானத்தில் கோவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள்.
திருமணத்துக்காக ஓட்டலை மின் விளக்குகளால் அலங்கரித்து இருந்தார்கள். நேற்று மாலை 3 மணியளவில் சமந்தாவுக்கு மருதாணி வைக்கும் வைபவம் நடைபெற்றது. நாக சைதன்யாவின் பாட்டி ராஜேஸ்வரி நவீன வேலைப்பாடுகளுடன் தயார் செய்த புடவை சமந்தா உடுத்தியிருந்தார். நேற்று நள்ளிரவு 11.52 மணிக்கு இந்து முறைப்படி சமந்தா கழுத்தில் நாக சைதன்யா தாலி கட்டினார். உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அனைவருமே அட்சதைத் தூவி புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். கோவாவிலேயே இன்று மாலை 5.30 மணிக்கு கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள்.
கோவாவில் பிரசித்தி பெற்ற ‘டபிள்யூ’ எனும் நட்சத்திர ஓட்டலில் இந்தத் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஓட்டலில் ஒரு அறைக்கான தினசரி கட்டணம் ரூ.16 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை என கூறப்படுகிறது.
விரைவில் ஹைதராபாத்தில் வெகு விமரிசையாக திருமண வரவேற்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.10 கோடி வரை செலவு செய்ய உள்ளனர். இந்த செலவை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவர் மட்டுமே ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT