Last Updated : 17 Dec, 2015 10:47 AM

 

Published : 17 Dec 2015 10:47 AM
Last Updated : 17 Dec 2015 10:47 AM

இதுதான் நான் 4 - அந்த வயசுல அதெல்லாம் தெரியாதே!

புதுப்படம் பார்க்குறோம்னாலே தீபாவளி பண்டிகை மாதிரி மனசுக்குக் கொண்டாட்டமா இருக்கும். அதுவும் சின்ன வயசுல ரிலீஸுக்கு முன்னாடி பிரிவ்யூ ஷோவ்ல படம் பார்க்குறதுன்னா சொல்லவா வேணும்?

பிரிவ்யூ தியேட்டர்ல சீட் புடிக்கிறது பெரிய விஷயம். மொத்தம் 250 சீட்டு இருக்கும். படம் ரிலீஸாகிறப்போ தியேட்டருக்குக் கூட்டம் வர்ற மாதிரிதான் பிரிவ்யூ தியேட்டருக்கும் கூட்டம் வரும். முதல்லயே வந்துடுவோம். பின்னாடியில இருந்து ரெண்டு, மூணு வரிசை தள்ளி இடம்பிடிச்சுடுவோம். பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் ஒவ்வொருத்தரா வருவாங்க. அவங்க வர வர நாங்க உட்கார்ந்திருக்கிற வரிசை கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி வந்துக்கிட்டே இருக்கும்.

ஸ்கிரீன் பக்கத்துல உட்கார்ந்து படம் பார்க்கப் பிடிக்காது. கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி வந்து கடைசியில நாலு, அஞ்சு வரிசைதான் ஸ்கிரீனுக்கு முன்னே இருக்கும். இதைத் தாண்டியும் முன்ன போக வெச்சுடுவாங்களோனு அப்போ இருக்குற டென்ஷன் இருக்கே? அதுதான் அந்த வயசு. படம் ஆரம்பிச்சு தியேட்டர் கதவை மூடும்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடுவோம்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், மோகன், அந்தந்தப் படத்தோட பிரபலங்கள், இயக்குநர்கள்னு எல்லாரும் வருவாங்க. டிரெஸ் சூப்பரா இருக்கும். அவங்களோட பாடி ஸ்ப்ரே நல்ல வாசனை வரும். பார்க்குறதுக்கே மலையைப் பார்க்குற மாதிரி இருக்கும். ‘மாஸ்டர்ஜி எப்படி இருக்கீங்க?’னு அப்பாவுக்கு வணக்கம் சொல்வாங்க. அப்பா, எங்களை அவங்களுக்கெல்லாம் அறிமுகம் செஞ்சு வைப்பாங்க. பயமா இருக்கும். அவங்கள எல்லாம் தூரத்துல இருந்துதான் பார்க்கணும்னு அந்த வயசுலத் தோணும்.

அந்த நாட்கள்ல சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன் இவங்க எல்லாம் காமெடி நடிகர்களாப் படங்கள்ல நடிச்சாங்க. ஒருமுறை அப்பாகூட பிரிவ்யூ போனப்போ எங்க சீட்டுக்குப் பின்னாடி சுருளிராஜன் சார் நின்னார். நிச்சயமா அவரா இருக்க மாட்டார்னு நெனச்சேன். ஏன்னா, அவர் சீரியஸாப் பேசிட்டு இருந்தார். அப்புறம் ஏதோ யோசிச்சுக்கிட்டே இருந்தார். படங்கள்ல எப்பவுமே காமெடி பண்றவர், இப்போ மட்டும் எப்படி சீரியஸாக இருக்க முடியும்? கண்டிப்பா இவர் சுருளிராஜன் சாரா இருக்க வாய்ப்பே இல்லைன்னு மீண்டும் மனசு சொல்லுச்சு.

ஆனா, நின்னது அவர்தான். படத்துல காமெடி செய்றவங்க, நேர்லயும் காமெடி பண்ணிக்கிட்டேதான் இருக்கணும்னு அந்த வயசு நெனச்சுது. அதேபோல, ஆறு மாசத் துக்குப் பிறகு சுருளிராஜன் சாரோட இன் னொரு படம் பிரிவ்யூ பார்க்கப் போயிருந்தேன். அப்போ அவர் வரலை. ‘எங்கப்பா அவர்?’னு அப்பாகிட்ட கேட்டேன். அவர் இறந்துட்டதா சொன்னார். மனசுல அப்படி ஒரு ஃபீலிங்.

பிரிவ்யூ தியேட்டர்ல கிடைக்கிற காபி, கேக் எல்லாத்துக்கும் அவ்வளவு சந்தோஷம் வரும். அதை வாங்குறதுக்காகவே இன்டர்வெல்ல பாத்ரூம் கூட போக மாட்டோம். அடுத்த நாள் ஸ்கூலுக்கு வந்து ஃபிரெண்ட்ஸ்கிட்டே ‘ஸ்டார்ஸ் எல்லாம் எங்கப்பாவை நலம் விசாரிச்சாங்க. எனக்குக் கை கொடுத்தாங்க. கேக் எல்லாம் சாப்பிட்டேன்’னு பெருமையா சொல்வேன். ஆனா, சீட்டு மாத்தி உட்காரவிட்ட விஷயத்தை மட்டும் சொல்ல மாட்டேன்.

அப்பவும் வெள்ளிக்கிழமையிலதான் படம் ரிலீஸாகும். பிரிவ்யூ ஷோ திங்கள்கிழமையில இருந்து போட ஆரம்பிச்சுடுவாங்க. அதனால அப்பா, அம்மாகிட்ட ‘எப்போ படத்துக்கு கூட்டிட்டுப் போவீங்க?’னு தொந்தரவு பண்ண ஆரம்பிச்சுடுவோம். அப்போ மேனா, தேவி ஸ்ரீதேவி, குட்லக் இது மூணும்தான் பிரிவ்யூ தியேட்டர். ‘நாளைக்கு பிரிவ்யூ படம் பார்க்க போறேன்டா’னு கெத்தா ஸ்கூல்ல ஃபிரெண்ட்ஸ்கிட்டே சொல்லிட்டு வந்துடுவேன். அடுத்த நாள் கதை கேட்க ரெடியா இருப்பாங்க. அதனால ஒருநாள் கூட தள்ளிபோயிடக் கூடாதுனு கடவுள்கிட்ட வேண்டிப்பேன்.

அன்னைக்கு மட்டும் ஸ்கூல் விட்டு வந்ததும் 5 மணிக்கே ரெடியாயிடுவேன். படம் 7 மணிக்குத்தான். இருந்தாலும் மனசு கேக்காது. ஷார்ப்பா அந்த நேரத்துக்குப் போகணும்னு அப்பா நிதானமா கிளம்புவார். ‘சீக்கிரம் சீக்கிரம்’னு நின்னா கண்டிப்பா திட்டுவார். அதனால அம்மாகிட்டபோய் அவசரப்படுத்துவோம். அவங்க திட்ட மாட்டாங்க.

படம் பார்க்க அவ்வளவு சீக்கிரமே கிளம்பி நிப்போமேனு இப்போ தோணுது. அந்த வயசுல அதெல்லாம் தெரியாதே. இப்போகூட என் பசங்க விளையாட்டு கிரவுண்ட், தியேட்ட ருக்குன்னு கூட்டிட்டுப் போறோம்னா அவ்வளவு சீக்கிரம் கிளம்பி நிப்பாங்க. அவங்க மனசு எப்படி இருக்கும்னு நான் என்னோட சின்ன வயசுக் குள்ள போய் நெனைச்சிப் பார்த்துப்பேன். அதனா லயே அவங்க கிளம்பும்போதே நானும் ரெடியா யிடணும்னு சீக்கிரமாவே ரெடியாயிடுவேன்.

அப்பா ஒரு ஸ்கூட்டர் வெச்சிருந்தார். தம்பி பிரசாத் அம்மா மடியில உட்கார்ந்துப்பான். அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் நடுவுல அண்ணன் ராஜூ இடம் பிடிச்சுடுவான். ஸ்கூட்டர் முன்னாடி கொஞ்சம் இடம் இருக்குமே, அந்த இடத்துல நான் நின்னுப்பேன். அப்பாதான் ஸ்கூட் டரை ஓட்டுவார். என்னவோ நான்தான் ஓட்டுற மாதிரியே நினச்சுப்பேன். பைக்ல ஏறி வீட்டை விட்டுக் கிளம்பினதும் சந்திர மண்டலத்துக்கே போறதா அப்படி ஒரு சந்தோஷம் வரும்.

இப்போ பிரிவ்யூ ஷோ போடுறதே இல்லை. அப்படியே போட்டாலும் சோஷியல் மீடியாவில் அந்தப் படங்களை அப்படி இப்படின்னு எழுதிடுறாங்க. அப்போவெல்லாம் பிரிவ்யூக்குப் போறதே ஒரு சந்தோஷம். அங்க வர்றவங்கக்கிட்டே பேசுறது அதைவிட சந்தோஷம். அப்போ படம் பார்த்தவங்கள்லாம் அதில் உள்ள நல்ல விஷயங்களைத்தான் பேசுவாங்க. இப்போ கெட்டதை மட்டுமே பேசுறாங்க. திட்டுறாங்க. எதுக்குத் திட்டணும்? நம்மப் பசங்க தப்புப் பண்ணினா, ‘சரிடா இனிமே செய்யாதே’னு சொல்றோம். இதுவே மத்தவங்க பண்ணினா அதைக் குற்றமா பெருசுப் படுத்திடுறோம். அதனாலதானோ என்னவோ பிரிவ்யூ கலாச்சாரமே போயிடுச்சு. அதில் எனக்கு வருத்தம்தான்.

அதேபோல, அப்போவெல்லாம் பிரிவ்யூ தியேட்டர்ல போடுற இந்தப் படம்தான் பிடிக்கும்னு இல்லை. எல்லாப் படத்தையுமே பார்ப்போம். பார்க்கிற எல்லாப் படங்களுமே பிடிச்சிருக்கும். பிரிவ்யூவுக்குக் கிளம்பிப் போறதுலேர்ந்துத் திரும்பி வர்ற வரைக்கும் அந்தப் படத்துல நடிச்சவங்களைப் பார்த்தது, பேசுனது, ஃபிரெண்ட்ஸுக்கு முன்னாடியே அந்தப் படத்தைப் பார்த்துட்டோம்கிற நினைப்பு எல்லாமே சந்தோஷமா இருக்கும். வீட்டுக்கு வந்ததும் சாப்பிட அம்மா தோசை சுட்டுக் கொடுப்பாங்க. அந்த வயசுலயே நான் 15 தோசை சாப்பிடுவேன். அம்மா, கொஞ்சமும் அலுக்காம சுட்டுத் தட்டில் போட்டுக்கிட்டே இருப்பாங்க. அம்மான்னா ஸ்வீட். அம்மாதான் அழகு. அவங்கதான் என் பிரியம். அப்போ இருந்து இப்போ வரைக்கும் அவங்க என் உயிர். இப்பவும் நான் என் அம்மாவ ‘அக்கா.. அக்கா’ன்னுதான் கூப்பிடுவேன். அது ஏன்?

- இன்னும் சொல்வேன்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x