Published : 22 Sep 2015 12:00 PM
Last Updated : 22 Sep 2015 12:00 PM

பேய்களிடம் கால்ஷீட் வாங்க...

கோலிவுட்டில் பேய் சீசன் பட்டையக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ‘காஞ் சனா’, ‘அரண்மனை’, ‘டார்லிங்’, ‘டிமாண்டி காலனி’, ‘பேபி’, ‘ஸ்டிராபெரி’, ‘மாயா’ என்று பேய்ப் படங்கள் வரிசை கட்டி வந்து கோடம்பாக்கத்தைக் கலக்குகின்றன. தற்போது படப்பிடிப்பில் இருக்கும் ‘சவுகார்பேட்டை’ படத்தின் கிளைமாக்ஸில் 50 பேய்களுடன் கதா நாயகன் சண்டையிடுவது போல காட்சி படமாக்கப்படுவதாக செய்தி வந்துள் ளது. போகிற போக்கைப் பார்த்தால், பேய்களிடம் கால்ஷீட் வாங்குவது பெரும்பாடாகப் போய்விடும்போல இருக்கிறது!

முன்னணி நடிகர், நடிகைகள்போல பேய்களுக்கும் கேரவன் வசதி செய்தாக வேண்டும். பார்த்தாலே பீதியைக் கிளப்பும் புளியமரம், முருங்கை மரம் ஆகியவைதான் பேய்களுக்கு கேரவன். இவற்றை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே கொண்டுவர வேண்டும். முருங்கை மரம் கிடைக்கலைன்னு வேப்ப மரம், புன்னை மரம் கொண்டுவந்தால் அவ்ளோதான்.. பேய்கள் டென்ஷனாகி, ‘ஷூட்டிங் கேன்சல்’னு சொல்லிடும். முருங்கைத் தோப்பு, புளியந்தோப்பாக இருந்தால் ரொம்ப வசதி.

பேய்களுக்கு ரத்த ஜூஸ்தான் பேவரிட்! ஆடு, மாடு ரத்தம் மட்டு மில்லாம அப்பப்போ ஓ பாஸிட்டிவ், ஏபி நெகட்டிவ்வும் கேட்கும். செட்டில்மென்ட் பாக்கி வச்சா, ரத்த ஜூஸ் கொடுக்கத் தேவையில்ல. தயாரிப்பாளரை நேர்ல கொண்டுபோய் நிறுத்திட்டா போதும். அதுகளே ஸ்டிரா போட்டு அவரோட ரத்தத்தை டைரக்டா உறிஞ்சி எடுத்திடும்!

அப்புறம்.. சம்பளத்துலயும் பேய்ங்க ரொம்ப ஸ்டிரிட்டு! பேய் நடிக்கிறதுக்கு ஒரு சார்ஜ், ஃபைட் பண்ண ஒரு சார்ஜ், அறையறதுக்கு ஒரு சார்ஜ். பேயை யாராவது அறையுற மாதிரி இருந்தா டபுள் சார்ஜ்!

கண்டிப்பா இரவுலதான் ஷூட்டிங் வைக்கணும். நடுராத்திரி பன்னிரெண்டு மணி அடிச்சதுக்கு அப்புறம்னா டபுள் ஓகே. ஒருவேளை, பகல்ல ஷூட்டிங்னா கண் விழிச்சு நடிக்கறதுக்காக டபுள் பேட்டா கொடுக்கணும்!

காஸ்டியூம் பிரச்சினையே இல்ல. வெறும் வெள்ளைப் புடவை போதும். அதுங்களுக்கு கலர் டிரஸ் கொடுத்து தொல்லை பண்ணக்கூடாது. அப்படி கலர் டிரஸ் போடச்சொன்னா அதுக்கு தனி அமவுன்ட்! அதேபோல அவுத்துப் போட்ட கூந்தலை வாரச்சொல்லி டார்ச்சர் பண்ணக்கூடாது!

‘‘பேய் பங்களான்னாலே பாழ டைஞ்சு போய், ஒட்டடை படிஞ்சுதான் இருக் கணுமா. அதெல்லாம் ஓல்டு ஃபேஷன். அங்கெல்லாம் இருந்தா டஸ்ட் அலர்ஜி வருதுன்னு, எல்லா பேய்களும் இடத்தை மாத்திட்டோம். அதனால, ஷூட்டிங் ஸ்பாட் சுத்தமா இருக்கணும்’’ இது பேய்களோட முக்கியமான கண்டிஷன்.

தமிழ் பேய்ப் படம்னா, தமிழ்ப் பேய்க்குதான் முன்னுரிமை கொடுக் கணும். கேரளா பேயி, வடநாட்டு பேயி, வெளிநாட்டு பேயி, டப்பிங் பேயின்னு புக் பண்ணக்கூடாது. இல்லைனன்னா பேயடிதான்!

லோக்கல் பேய்ங்கிறதுக்காக படப் பிடிப்பு முழுவதையும் உள்ளூர்லயே முடிச்சுடக் கூடாது. வெளிநாட்டுல கண் டிப்பா ஒரு டூயட்டாவது வைக்கணும். ‘கிரேக்க நாட்டின் பேயழகோ! பிரேசில் நாட்டுப் பிசாசிவளோ!’ன்னு வைரமுத் துவோ, முத்துக்குமாரோ எழுதுற வரி களுக்கு ஆடியே ஆகணும்!

இப்படி ஏராளமான நிபந்தனைகள் விதிக்கும் பேய்களை தாஜா செய்து கால்ஷீட் பெற்றுத் தருவதற்கு பேய் ஏஜென்ட், பேய் ரிலேஷன் ஆபீஸர்கள் சிலர் இருக்கிறார்களாம். அவர்கள் உதவியுடன்தான் இப்போதெல்லாம் பேய்களின் கால்ஷீட் வாங்கப்படுவதாக கேள்வி!

ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x