Published : 15 Feb 2014 11:56 AM
Last Updated : 15 Feb 2014 11:56 AM

நானும் பாலுமகேந்திராவும்- ஓர் எழுத்தாளரின் சந்திக்காத அனுபவம்

1998 டிசம்பர் மாதம் என நினைக்கிறேன். எனக்கு அப்போது டெலிபோன் கிடையாது. கல்கியில் பகுதிநேர நிருபர் பணியாற்றி வந்ததால் என் இல்லத்திற்கு ஒரு கிமீ தொலைவில் பிரதான சாலையில் உள்ள ஓர் அலுவலகத்து போன் எண்ணை ஃபேக்ஸ் மற்றும் பி.பி எண்ணாக கல்கி அலுவலகத்திற்கு கொடுத்திருந்தேன். தினசரி வெளியூர் சென்றுவிட்டு வரும்போது அங்கே சென்று ஏதாவது போன் வந்துள்ளதா என்று கேட்டு வருவது வழக்கம்.

அப்படி ஒருநாள் என்னிடம் ஒரு போன் எண்ணைக் கொடுத்து, “டைரக்டர் பாலுமகேந்திராவாம். உங்களிடம் பேச வேண்டுமாம். இந்த எண்ணில் தொடர்புகொள்ளச் சொன்னார்” என்று தந்தார், அந்த அலுவலக ஊழியர். அது சென்னை தொலைபேசி எண்.

எனக்கு ஒரே யோசனை. நான் பாலுமகேந்திராவை இதற்கு முன் பார்த்தது கிடையாது; பேட்டியெடுத்ததும் இல்லை; பேட்டிக்கான அனுமதி கூட கேட்டதில்லை. பிறகு எப்படி?

அடுத்த நாள் அவர் குறிப்பிட்டிருந்த நேரத்தில் 'தொலை' பேசினேன். அவர்தான் பேசினார். என் பெயரையும் ஊரையும் சொன்னேன்.

"மகிழ்ச்சி. உங்க கதை 'அந்த முரடனும் சில டீச்சர்களும்' படித்தேன். அருமையாக இருந்தது. அதை உங்கள் அனுமதியில்லாமல் கதைநேரம் பகுதிக்கு படம் பிடித்துவிட்டேன். மன்னிக்கணும். அதுக்காக உங்கள் பெயருக்கு சின்ன தொகைக்கான காசோலை அஞ்சலில் அனுப்பியிருக்கிறேன். பெற்றுக்கொண்டு ஒத்துழைக்கவேண்டும். நாளைக்கு சன் டிவியில் பார்த்துவிட்டு அனுபவத்தை சொல்லுங்கள்." கத்தரித்த மாதிரியான பேச்சு.

அடுத்தநாள் ஊரே கூடி பாலுமகேந்திரா தயாரிப்பில் - இயக்கத்தில் 'முரடன் மகன்' என்ற தலைப்பில் என் கதை திரைப்படம் ஆகியிருப்பதை கண்டுகளித்தது.

அதற்கடுத்த நாள் ரூ.2500-க்கான காசோலை பாலுமகேந்திரா கையெழுத்துடன். இன்றும் அந்த காசோலையின் ஜெராக்ஸ் பிரதியை வைத்துள்ளேன்.

இது நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். இரவு 10 மணிக்கு மேல் இருக்கும். என் செல்போனுக்கு அடுத்தடுத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோழர்கள் தொலை பேசினார்கள். எல்லோரும் சென்னையில் மாநில மாநாட்டில் இருக்கிறார்களாம். அங்கே பாலுமகேந்திரா, தான் சிறந்த சிறுகதைகளை திரைக்கதையாக்கின அனுபவங்களை காட்சி ஒளி அமைப்புடன் விவரித்தாரம். அதில் கல்கியில் வந்த ’அந்தமுரடனும் சில டீச்சர்களும்’ கதையை எப்படி 'முரடன் மகன்' என்று கதை நேரத்தில் திரைக்கதையமைத்தேன் என்று அரை மணிநேரத்திற்கும் மேலாக விவரித்தாராம். அதை புளகாங்கிதத்துடன் விவரித்தனர் தோழர்கள்.

ராத்திரி பகலாய் எந்த ஒரு பிரதிபலனும் பார்க்காமல் எழுதி எழுதி கைகள் மனமும் ஓயும் எழுத்தாளர்களின் கதைகளை அடுக்கடுக்காய் எடுத்து படித்து அதில் உள்ள கருவை எடுத்து உல்டா செய்து திரைப்படங்கள் தயாரிக்கும் திரைத்துறை பிதாமகர்கள் இருக்கும் வெள்ளித்திரையில், பாலுமகேந்திரா ஒரு மூன்றாம்பிறைதான்.

அவரை சந்தித்தே இராத ஓர் எழுத்தாளனுக்கு கொடுத்த அவரின் அந்த நேர்மை மிக்க வெகுமதியை மற்றொரு சினிமாக்காரர் செய்வாரா என்பது சந்தேகம்தான்.

கா.சு.வேலாயுதன், பத்திரிகையாளர் - எழுத்தாளர், தொடர்புக்கு velayuthan.kasu@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x