Published : 17 Sep 2018 11:39 AM
Last Updated : 17 Sep 2018 11:39 AM
பிரபல மலையாள நடிகர் கேப்டன் ராஜூ இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது வயது 68.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் கேப்டன் ராஜூ. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர், 1981-ம் ஆண்டு 'ரக்தம்' என்ற மலையாளப் படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். மலையாளப் படங்கள் மட்டுமின்றி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.
மலையாளத்தில் இவர் நடித்த 'நாடோடிக்காற்று', 'வடக்கன் வீரகதா', 'சி.ஐ.டி.மூசா' போன்ற திரைப்படங்கள் பிரபலமானவை. தமிழில் நடிகர் ரஜினிகாந்த்துடன் 'தர்மத்தின் தலைவன்', கமல்ஹாசன் நடித்த 'சூரசம்ஹாரம்', சத்யராஜ் நடித்த 'ஜல்லிக்கட்டு', ’சின்னப்பதாஸ்’, ’ஜீவா’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ராஜூ கடந்த ஜூன் மாதம் வளைகுடா நாடான மஸ்கட் சென்றார். அங்கிருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் சென்றார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கொச்சி அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில், இன்று அதிகாலையில் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பாகவே அவர் உயிர் பிரிந்தது.
நடிகர் கேப்டன் ராஜூவுக்கு பிரமிளா என்ற மனைவியும், ரவிராஜ் என்ற மகனும் உள்ளனர்.
ராஜூவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT