Published : 07 Feb 2019 11:47 AM
Last Updated : 07 Feb 2019 11:47 AM

நிகழ்ச்சியில் ஹிஜாப் அணிந்த விவகாரம்: தந்தை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த ரஹ்மான் மகள்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா ஹிஜாப் அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை பலரும் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் இந்த விமர்சனங்களுக்கு கதிஜா பதிலளித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருதை பெற்றுத்தந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படத்தின் இசைப் பயணம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் ரஹ்மானின் மகள் கதிஜா தனது தந்தையை நேர்காணல் செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் அனில் கபூர், குல்சார் ஆகிய பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நேர்காணல்  நிகழ்வில் கதிஜா ஹிஜாப் அணிந்திருந்தார். இதனை சமூக வலைதளங்களில் பலரும் ரஹ்மானைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்திருந்தனர்.

ஒரு முன்னணி இசையமைப்பாளர் முற்போக்கு  சிந்தனையில்லாமல் தனது குழந்தைகளை வழி நடத்துகிறார் என்று பலரும் விமர்சித்தனர்.

இதற்கு ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில்  நீதா அம்பானியுடன்  தனது மனைவியும், இரு மகள்களும் இருக்கும் புகைப்படம்  ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.

அதில் ரஹ்மானின் மனைவி, அவரது மகள் ரஹிமா ரஹ்மான் பர்தா அணியாமல் இருந்தனர். ரஹ்மானின் மற்றொரு மகளான கதிஜா மட்டும் ஹிஜாப்புடன்  இருந்தார். இந்தப் புகைப்படத்தை சுட்டிக்காட்டி  ரஹ்மான் ஆடையைத் தேர்வு செய்வது அவர்களது விருப்பம் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த  நிலையில் ரஹ்மானின் மகள் கதிஜா தன் தந்தை மீதான விமர்சனங்களுக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார். அதில், ''சமீபத்தில் என்  தந்தையுடன் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சி இவ்வளவு பரவலாகச் சென்றடையும் என நான் எதிர்பார்க்கவில்லை.

இருப்பினும் எனது ஆடை சார்ந்த விருப்பம் என் தந்தையின் வற்புறுத்தலில் நடக்கிறது என்றும் அவர் இரட்டை நிலைப்பாடு கொண்டவர் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். 

நான் எனது வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் முடிவுகளுக்கும் எனது பெற்றோருக்கும் சம்பந்தம் கிடையாது. இதனை  நான் முழுமையாகவும், பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். 

எனது  வாழ்க்கையில் எனக்குத் தேவையானதைத் தேர்வு செய்வதற்கான பக்குவம் எனக்கு உள்ளது. அனைவருக்கும் அவர்கள் விரும்பும் ஆடையை அணிவதற்கு முழு விருப்பம் உள்ளது. அதனைதான் நான் செய்கிறேன். எனவே உண்மையான நிலைமை தெரியாமல் தயவுசெய்து நீங்களே  எதையும் தீர்மானிக்காதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

கதிஜாவின் பதிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x