Published : 13 Jan 2019 08:24 PM
Last Updated : 13 Jan 2019 08:24 PM
விஜய் டி.வி பணியில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டிடி நெகிழ்ச்சியுடன் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல்வேறு புதுமைகளைக் கொண்டு வந்து, தற்போது முன்னணி தொலைக்காட்சியாக இருக்கிறது விஜய் தொலைக்காட்சி. இதில் வரும் பல்வேறு நிகழ்ச்சிகள், பேட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் என பலவற்றை டிடி தான் தொகுத்து வழங்குவார்.
இதன் மூலம் திரையுலகில் பலருடைய நட்பையும் பெற்று, தற்போது சில படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது விஜய் டிவியில் டிடி பணிக்குச் சேர்ந்து 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதை முன்னிட்டு அவருக்கு நினைவுப் பரிசு ஒன்றை அளித்து கெளரவப்படுத்தியுள்ளது விஜய் டிவி.
விஜய் டிவியில் 20 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் டிடி. அதில் அவர் கூறியிருப்பதாவது:
எங்கே துவங்குவது என்றே தெரியவில்லை.. என மனம் நன்றியுணர்ச்சியால் நிறைந்திருக்கிறது. என்னுடைய 13-வது வயதில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி தேர்வுக்காக வந்தேன். இன்றுவரை இங்கிருக்கிறேன்.
நான் பல கொண்டாட்டங்களில், பலருக்காக பங்கேற்று இருக்கிறேன். அந்தக் கொண்டாட்டம் மறக்க முடியாததாக இருக்க வைக்க வேண்டியது என் கடமை என்றே இருந்திருக்கிறேன். ஆனால், இந்த முறை நான் அதைப் பெறும் இடத்தில் இருப்பது, வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இந்த 20 வருடத்து பயணம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருந்தது. பயணம் தொடர்கிறது.
கடவுளுக்கும், விஜய் டிவி குடும்பம், திரைப் பிரபலங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், ஊடகத் துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், சீனியர்கள், மக்கள் தொடர்பாளர்கள் எனஎன் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.
எனக்காக நேரம் ஒதுக்கி என்னை நேரிலும், கடிதம், ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மூலமாகவும் தொடர்பு கொண்டு என் மீது அன்பைப் பொழிந்த எல்லா தாய்மார்கள், தந்தையர், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நன்றி. அன்று முதல் இன்று வரை எனக்காக இருந்தமைக்கு நன்றி. இன்னும் 20 வருடங்களைக் கடக்க உங்கள் அன்பே எனக்குப் போதும். வாழ்வின் அடுத்த கட்டத்திலும் உங்களை மகிழ்விப்பேன் என உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு டிடி வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT