Published : 13 Jul 2023 06:15 AM
Last Updated : 13 Jul 2023 06:15 AM
எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘ரசிகரும் ரசிகையும்’, ‘கோபுர விளக்கு’, ‘சிலிர்ப்பு’ ஆகிய 3 சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கியுள்ள ‘சின்னஞ்சிறு கதைகள் பேசுவோம்’ என்னும் கதைகூறல் நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘மேடை’ அரங்கில் ஜூலை 8-ல் அரங்கேற்றப்பட்டது.
நடிப்பு, உரையாடல், வாசிப்பு, பார்வையாளர்களுடனான தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல உத்திகளின் மூலம் கதைகளின் எழுத்து வடிவத்துக்கு முதன்மை முக்கியத்துவம் அளிக்கும் இந்தக் கதைகூறலை உருவாக்கியிருக்கிறார் ப்ரஸன்னா ராமஸ்வாமி.
கதைகளில் கதாசிரியரின் வர்ணனைகளையும் கதாபாத்திரங்களின் மனோவோட்டங்களையும் காட்சிகளாக உருமாற்றுவது சவாலானது. ‘சிலிர்ப்பு’ கதையின் இறுதியில் கதைசொல்லியான குமாஸ்தா, கும்பகோணத்தில் ரயிலைவிட்டு இறங்கி தனது 6 வயது மகனைத் தூக்கிக்கொண்டு நடக்கிறார். இதில் குமாஸ்தா, நடக்கத் தெரிந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்வதற்கான காரணத்தைத் தெரிவிப்பதற்கு காட்சி வடிவத்தில் பல வழிமுறைகள் உள்ளன. ஆனால் அதற்கு ஆதாரமாக அமைந்த உணர்வை முழுமையாகக் கடத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ப்ரஸன்னா ராமஸ்வாமி தேர்ந்தெடுத்த வடிவம் இந்தச் சவாலைக் கடக்க உதவியிருக்கிறது. கதைகளில் எதை நடித்துக் காண்பிக்க வேண்டும், எதை வாசித்துக் காட்ட வேண்டும் எதைத் தகவல்களாகச் சொல்ல வேண்டும் என சரியாகத் தேர்ந்தெடுத்திருப்பதாலும் இவை மூன்றையும் நிகழ்த்துக் கலை அனுபவத்தைப் பாதிக்காத வகையில் பயன்படுத்தியிருப்பதாலும்தான் இது சாத்தியமாகியிருக்கிறது.
3 கதைகளையும் படிக்கும்போது ஏற்படும் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்கு கடத்துவதில் பெருமளவு வெற்றிபெற்றிருக்கிறார்கள். ‘கோபுர விளக்கு’ கதையில் வறுமை காரணமாகப் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட பெண் இறந்துவிடுகிறார். அந்தப் பெண் குறித்து கதைசொல்லியாக வரும் எழுத்தாளருக்கும் அவர் மனைவி கவுரிக்கும் நிகழும் உரையாடலில் தி.ஜா கொண்டுவரும் எகத்தாளம், பரிவு, ஆற்றாமை அனைத்தும் கதையில் உள்ளபடியே வெளிப்பட்டுள்ளன.
கர்னாடக இசை மேதைக்கும் ரசிகைக்குமான உரையாடல்களால் நிரம்பிய ‘ரசிகனும் ரசிகையும்’ கதையில் உரிய இடங்களில் கர்னாடக இசைப் பாடல்கள் (ஸ்வர்ண ரேதஸ்) நுழைத்திருப்பது, கர்னாடக இசை மேதை, பெண்களின் புற அழகில் நாட்டம் மிகுந்தவர் என மார்க்கண்டம் கதாபாத்திரத்தின் இரட்டைநிலையை உணர்த்த 2 நடிகர்களைப் பயன்படுத்தியிருப்பது என இயக்குநரின் படைப்பூக்கமிக்க இடையீடுகள் கவனம் ஈர்க்கின்றன.
தேர்ந்த இசை ரசிகை (ரசிகனும் ரசிகையும்), எழுத்தாளரின் மனைவி (கோபுர விளக்கு), ஏழைச் சிறுமியை ரயிலில் அழைத்துவரும் பணக்காரப் பெண்மணி (சிலிர்ப்பு) ஆகிய 3 கதாபாத்திரங்களிலும் தர்மா ராமன் சிறப்பாக நடித்திருக்கிறார். மார்க்கண்டத்துக்குப் பெண்கள் முன் ஏற்படும் குழைவை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ராதாகிருஷ்ணன் (ரசிகரும் ரசிகையும்). 2 கதைகளில் கதைசொல்லும் கதாபாத்திரமாக வரும் பரமேஸ்வர் (சிலிர்ப்பு, கோபுர விளக்கு), மிருதங்கக் கலைஞராகவும் (ரசிகரும் ரசிகையும்) கோயில் மேலாளராகவும் (கோபுர விளக்கு) வரும் சேது ஆகியோர் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.
கதைகளின் வர்ணனைப் பகுதிகளை வாசிப்பவர்களாகவும் தகவல்களைக் கடத்துபவர்களாகவும் இளைஞர்கள் சூர்யா, ஆதித்யா இருவரும் அர்ப்பணிப்புடன் பங்களித்திருக்கிறார்கள். ஆனந்த் குமாரின் இசையும் சார்லஸின் ஒளி அமைப்பும் காட்சி அனுபவத்தை மேம்படுத்தியுள்ளன.
இந்தக் கதைகூறல் நிகழ்ச்சி கதை வாசிப்பாகவும், நிகழ்த்துக் கலைக் காட்சி அனுபவமாகவும் நிறைவளிக்கின்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT