Published : 10 Jul 2023 07:19 AM
Last Updated : 10 Jul 2023 07:19 AM
‘லேடீஸ் அண்ட் ஜென்டில் வுமன்' ஆவணப்படம் மூலம் கவனம் பெற்றவர் மாலினி ஜீவரத்னம். அவர் ‘கிரவுட் ஃபண்டிங்' மூலமும் தனது வேட்டிக்காரி புரொடக்ஷன்ஸ் சார்பாகவும் ‘ஒய் ஸோ ஸ்ட்ரெயிட்' எனும் ஆவணப்படத்தை எடுத்துள்ளார். புனேவில் புகழ் பெற்ற நடனக் கலைஞராகவும் இயக்குநராகவும் உள்ள அமேயா என்பவரின் வாழ்வை பேசும் படம் இது. இவர் தனது வேட்டிக்காரி புரொடக்ஷன்ஸின் லோகோவாக ‘9' என்னும் எண்ணை அண்மையில் அறிமுகப்படுத்தினார்.
அதோடு, ‘டிக்கெட் 9' என்னும் தலைப்பில் மாற்றுப் பாலினத்தவர், பால்புதுமையரின் இசை, பாட்டு, நாடகம் என கலையின் எல்லா வடிவங்களும் அரங்கேறுவதற்கான மேடையாகவும் இது செயல்படும் என்றார்.
"எங்களைக் குறிக்கும் கேலிக்குரிய எண்ணாக ‘9' ஐ வைத்திருக்கின்றனர். எந்த எண்ணைக்கொண்டு எங்கள் மீது கற்களை எறிந்தார்களோ, அதிலிருந்து உருவாக்கிக் கொண்ட சிலைதான் இந்த ‘டிக்கெட்9'. பால் புதுமையரை நேசிப்பவர்கள், ஆதரவாக இருப்பவர்கள் என அனைவரையும் அன்பால் இணைக்கும் உறவுப்பாலம் இது" என்றார் மாலினி.
வசந்த் செல்வம் இயக்கிய ‘நான் ஆசைப்படும் ஒரு ஜோடி சிறகுகள்' நாடகத்தில், ஒரு கம்பளிப்பூச்சி எப்படி பட்டாம்பூச்சியாகிறது என்பது கதை. குழந்தைகள், அவர்கள் பாலினத்தைத் தாண்டி எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதும் இதில் இடம்பெற்றிருந்தது. 2 கலைஞர்கள் அவர்களின் கதையைச் சொல்கின்றனர். அந்தக் கதைக்குள் மேற்சொன்ன கதையும் உள்ளடங்கி இருந்தது. கதைச் சொல்லலில் இந்தப் பாணி, ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருந்தது. குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் இசை, பாட்டு, ஓவியம் போன்ற பல கலைகளும் ஒத்திசைவாக இடம்பிடித்திருந்தன.
பிரதான பாத்திரத்தில் மாயா கிருஷ்ணனும் கீர்த்தி பாண்டியனும் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தினர். பால்புதுமையரின் வெளிப்படுத்துதலின் சாராம்சத்தை சொல்வதாகவும் உள்ளடக்கம் அமைந்தது, வரவேற்பைப் பெற்றது.
ஸ்ரீஜித் சுந்தரத்தின் கட்டியக்காரி குழு சார்பாக ‘கதை கதையாம் காரணமாம்' நிகழ்வில் பேசியவர்களிடம் சிரிப்பு, சோகம், வெகுளித்தனம், காதல் எனப் பல உணர்ச்சிகளும் வெளிப்பட்டன. மாலினி நெறிப்படுத்திய குழுவிவாதத்தில் தங்கள் குடும்பத்தில் பிறந்த பால்புதுமையரை ஏற்றுக்கொள்வதன் அவசியத்தைப் புரியவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT