Last Updated : 03 Jul, 2023 06:29 AM

 

Published : 03 Jul 2023 06:29 AM
Last Updated : 03 Jul 2023 06:29 AM

கண்களில் கருணை; கால்களில் உறுதி

சலங்கையைக் காலில் கட்டி பால பாடம் தொடங்கும்போதே, அரங்கேற்றத்துக்கு நாள் குறிக்கும் காலமிது. ஆனால், அப்படி அவசரப்படாமல், பத்தாண்டுகளாக ஸ்ரீதேவி நிருத்யாலயா நடனப் பள்ளியில் குரு, டாக்டர் ஷீலா உன்னிகிருஷ்ணனிடம் நடனம் கற்றதன் பலனை, அண்மையில் வாணிமகாலில் தன் அரங்கேற்றத்தின் மூலம் அறுவடை செய்தார் லக்ஷிதா மதன்.

கணபதி துதியோடு தொடங்கிய நாட்டிய நிகழ்ச்சி தொய்வில்லாமல் நடந்ததற்கு குரு, ஷீலா உன்னிகிருஷ்ணனின் வழிகாட்டுதலும் அவரின் நடனத் திறமையும் துலக்கமான காலப்பிரமாணங்களுடன் கூடிய நட்டுவாங்கமும் ஜனனி ஹம்சினியின் குரலிசையும் குரு பரத்வாஜின் மிருதங்க இசையும் முத்துக்குமாரின் குழலிசையும் அனந்தநாராயணனின் வீணை இசையும் அனந்தகிருஷ்ணனின் வயலின் இசையும் பக்க பலமாக அமைந்தன.

நாட்டிய சாஸ்திரத்தில் சொல்லப்படும் அங்க சுத்தம், அபிநய சுத்தம் ஆகியவை அன்றைக்கு லக்ஷிதாவின் நாட்டியத்தில் வெளிப்பட்ட விதத்தை, சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற ஸ்ரீநிதி சிதம்பரம், நடிகர் சிவகுமார், லஷ்மி சிவகுமார், தயாரிப்பாளர் தாணு, கல்யாணம் வியந்து பாராட்டினர்.

கே.என்.தண்டாயுதபாணியின் ‘சுவாமியை வரச் சொல்லடி' சாகித்யத்தை வர்ணத்துக்கு எடுத்துக் கொண்டார். ஷீலா உன்னிகிருஷ்ணன் அதற்கு வரையறுத்திருந்த நடன முறையை ஒன்று விடாமல் ஆடிக்காட்டினார். கோபம், தாபம் என நவரசங்களையும் பாந்தமாக வெளிப்படுத்தின, லக்ஷிகாவின் கவிபாடும் கண்கள்.

கண்களில் கருணையும் கால்களில் உறுதியும் லக்ஷிதாவின் பலம். 6 திருக்குறள்களுக்கு நடனம் ஆடியது சிந்தையைக் கவர்ந்தது. மெலட்டூர் பாணி பரதநாட்டியத்தில் மிகவும் அரிதான (பேரணி நாட்டியம்) பானையின் மீது ஆடும் நடனத்தையும் ஆடியது புதுமையான காட்சி அனுபவமாக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x