Published : 13 Mar 2023 07:02 PM
Last Updated : 13 Mar 2023 07:02 PM
சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலஃபன்ட் விஸ்பரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தமிழகத்துடன் தொடர்புடைய இந்த ஆவணப் படத்தின் படைப்பாளி கார்த்திகி கொன்சால்வ்ஸ் குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் உள்ள தெப்பாக்காட்டில் வனத் துறை கண்காணிப்பில் குட்டி யானைகளை பராமரிக்கும் பணியில் இருந்து வருகிறார் பொம்மன். தாய் யானை கரன்ட் ஷாக்கில் இறந்துவிட, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடைத்த குட்டி யானை ரகுவை வளர்க்கும் பொறுப்பு பொம்மனிடம் விடப்படுகிறது. பொம்மனும் அவருக்கு உதவியாக இருக்கும் பெல்லியும் சேர்ந்து ரகுவை மீட்டெடுக்கிறார்கள். வாசிக்க > தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் பற்றிய முழுமையான பார்வை. | இவ்வாறு யானைக்கும் - இயற்கைக்கும் - மனிதர்களுக்கும் இடையேயான அன்பினை தத்ரூபமாக வழங்கிய ‘தி எலஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படத்திற்குதான் ஆஸ்கர் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆவண குறும்படம் ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டது முதலே அதன் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மீது வெளிச்சம் பற்றி கொண்டது.
இந்த வெளிச்சத்துக்கு இடையே கையில் ஆஸ்கர் விருதுடன் பேசிய கார்த்திகி கோன்சால்வ்ஸ், “பழங்குடி மக்களையும் விலங்குகளையும் முன்னிலைப்படுத்திய எங்கள் படத்தை அங்கீகரித்த அகாடமிக்கு நன்றி... இந்த விருது என் தாய்நாடான இந்தியாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த கார்த்திகி கோன்சால்வ்ஸ்: நீலகிரியில் பிறந்த கார்த்திகி அங்கேயே தனது கல்லூரிப் படிப்பபையும் முடித்திருக்கிறார். கார்த்தகி அடிப்படையில் ஒரு புகைப்பட பத்திரிகையாளர். குறிப்பாக காட்டு விலங்குகள் சார்ந்து, சுற்றுச்சூழல் சார்ந்தும் அவர் இயங்கி வந்திருக்கிறார். டிஸ்கவரி சேனல் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார்.
இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் நீலகிரியில் கார்த்திகி ஒருமுறை யதேச்சையாக பொம்மனையும், அவரது யானை ரகுவையும் சந்தித்திருக்கிறார். இந்த யதேச்சையான சந்திப்புத்தான் ஆஸ்கர் வரை கார்த்தகியை கொண்டு சேர்த்துள்ளது. தி எலிபஃன்ட் விஸ்பரர்ஸ்தான் கார்த்திகியின் முதல் படம். இந்த ஆவணப் படத்தை முழுமையாக உருவாக்க கார்த்திகிக்கு 6 வருடங்கள் தேவைப்பட்டன.
ஆவணப் படம் உருவாக்கம் குறித்து கார்த்திகி கூறும்போது, “நான் பெரும்பாலும் வனப்பகுதியின் அருகில் வளர்ந்ததால் அதன் தன்மை எனக்கு நன்கு தெரியும். விலங்குகளும் எனக்கு புதிது அல்ல. ஆவணப் படம் என்பது முழுவதும் யதார்த்த நிகழ்வுகளின் அடிப்படையில் ஆனது. அதற்கு செட்கள், ஸ்கிரிப்ட் எல்லாம் தேவையில்லை. இம்மாதிரியான படைப்புகளுக்கு பொறுமையும், வேட்கையும் முக்கியம்” என்கிறார்.
தி எலஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படத்தை பிரபல தயாரிப்பாளரான குனீத் மோங்கா தயாரித்திருக்கிறார். இவ்வாறு பெண்கள் இருவர் சேர்ந்து இந்தியாவுக்கு ஆஸ்கரை பெற்று தந்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT