Published : 10 Jan 2022 11:44 AM
Last Updated : 10 Jan 2022 11:44 AM
'ஜஸ்டிஸ் லீக்' படத்தில் நடித்தது தன் சினிமா வாழ்க்கையில் மிக மோசமான அனுபவம் என்று பேட்மேனாக நடித்த பென் அஃப்லெக் கூறியுள்ளார்.
2017-ம் ஆண்டு டிசி காமிக்ஸின் 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படம் வெளியானது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகளின்போது இயக்குநர் ஸாக் ஸ்னைடரின் மகள் தற்கொலை செய்து கொண்டதால் அவரால் படத்தின் வேலைகளைத் தொடர்ந்து கவனிக்க முடியாமல் போனது.
படத்தில் சில கூடுதல் காட்சிகளைச் சேர்க்க, 'அவெஞ்சர்ஸ்' முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஜாஸ் வீடன் உதவியை ஸ்னைடர் ஏற்கெனவே நாடியிருந்ததால், வீடனை வைத்துப் படத்தை முடிக்க வைத்தது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.
'ஜஸ்டிஸ் லீக்' படம் வெளியான பிறகு அதில் நடித்த நடிகர்கள் பலரும் ஜாஸ் வீடன் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்நிலையில் 'ஜஸ்டிஸ் லீக்' படத்தில் நடித்தது தன் சினிமா வாழ்க்கையில் மிக மோசமான அனுபவம் என்று பேட்மேனாக நடித்த பென் அஃப்லெக் கூறியுள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் இதுகுறித்துக் கூறியதாவது:
''முதலில் ‘தி பேட்மேன்’ படத்தை நான் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு மேட் ரீவ்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது அப்படத்தை அவர் இயக்கி வருகிறார். அடுத்தவர்களைத் திருப்திப்படுத்துவதை விடுத்து நாம் நம் வாழ்க்கையைக் கவனிக்க வேண்டும் என்று நான் புரிந்துகொண்டேன். உதாரணமாக 'பேட்மேன்' படத்தை இயக்குவதைச் சொல்லலாம். அதைச் செய்தால் நான் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன். ஆனால், இப்போது அதைச் செய்து கொண்டிருப்பவர் அதை விரும்பிச் செய்து கொண்டிருப்பார்.
என்னுடைய சினிமா வாழ்க்கையில் மிக மோசமான அனுபவம் என்றால் அது ‘ஜஸ்டிஸ் லீக்’தான். காரணம் அப்படத்தின்போது பல்வேறு கெட்ட விஷயங்கள் ஒருசேர நடந்து கொண்டிருந்தன. என் சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகள், விவாகரத்து, ஸாக் ஸ்னைடரின் மகள் மரணம், மீண்டும் அப்படத்தை எடுத்தது எனப் பல பிரச்சினைகள். அது மிக மோசமான ஒரு அனுபவமாக இருந்தது''.
இவ்வாறு பென் அஃப்லெக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT