Published : 04 Jun 2021 12:35 PM
Last Updated : 04 Jun 2021 12:35 PM
படக்குழுவினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால ‘மிஷன் இம்பாசிபிள்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மிஷன் இம்பாசிபிள்’. இப்பட வரிசையில் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. 2018ஆம் ஆண்டு வெளியான ‘மிஷன் இம்பாசிபிள்: ஃபால்அவுட்’ திரைப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்படத்தை கிறிஸ்டோபர் மெக்குயரியிடமே அடுத்த இரண்டு பாகங்களை இயக்கும் பொறுப்பை பாராமவுண்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.
2020, 21ஆம் ஆண்டுக்குள் ‘மிஷன் இம்பாசிபிள்’ அடுத்த இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் முடித்து 2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி 7ஆம் பாகத்தையும், 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி எட்டாம் பாகத்தையும் வெளியிட பாராமவுண்ட் நிறுவனம் முடிவு செய்திருந்தது. ஆனால், கரோனா நெருக்கடியால் குறிப்பிட்ட தேதிக்குள் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் பலமுறை படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்தச் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்கான அனுமதி கிடைத்த பிறகு லண்டனில் ஆளில்லாத பழைய விமான தளத்தில் ஒரு தனி கிராமத்தையே உருவாக்கி, படப்பிடிப்பு நடந்தது. இதில் படக்குழுவினரின் பாதுகாப்புக்காகப் பல லட்சம் டாலர்களைச் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது படப்பிடிப்பில் சிலர் விதிகளை மதிக்காமல் நடந்ததால் டாம் க்ரூஸ், அவர்களைக் கடுமையாகச் சாடி ஒலிப்பதிவு ஒன்றை அனுப்பினார். அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் கடும் வைரலானது.
இந்நிலையில் இந்த வாரம் படத்தில் இடம்பெறும் ஒரு நைட்கிளப் தொடர்பான காட்சியைப் படக்குழுவினர் படமாக்கி வந்தனர். இதில் டாம் க்ரூஸுடன் இணைந்து நடித்த 4 நடனக் கலைஞர்கள், 10 தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டாம் க்ரூஸ் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் படப்பிடிப்பை 14 நாட்களுக்கு நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே பலமுறை நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. டாம் க்ரூஸ் மற்றும் படக்குழுவினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT