Published : 05 Jan 2021 10:26 AM
Last Updated : 05 Jan 2021 10:26 AM
முதலில் மாடலாக விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்த டான்யா, 'ஃபோர்ஸ்ட் என்ட்ரி' என்கிற திகில் படத்தின் மூலம் 1975ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். இன்னொரு பக்கம் 80களில் அமெரிக்காவில் பிரபலமான 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' என்கிற தொடரின் 5-வது சீஸனில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
திரைப்படங்கள், சின்னத்திரை என்று நடித்து வந்தவருக்கு 'எ வியூ டு எ கில்' என்கிற ஜேம்ஸ் பாண்ட் படம் அதிக கவனத்தைப் பெற்றுத் தந்தது. வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் நாயகன் ராஜர் மூர், ஜேம்ஸ் பாண்டாக நடித்த கடைசிப் படமாக அமைந்தது. மேலும் மிட்ஜ் பின்ஸியோட்டி என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்த 'தட் 70ஸ் ஷோ' என்கிற தொலைக்காட்சித் தொடரும் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தது.
65 வயதான டான்யா, கிறிஸ்துமஸுக்கு முன்தினம் தனது செல்ல நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். வீடு திரும்பும்போது மயங்கிக் கீழே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாச உதவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில் நேற்று மாலை டான்யா இறந்துவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவரது இறப்புச் செய்தியை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் டான்யாவின் கணவரான லான்ஸ் ஓ ப்ரையன் தனது மனைவி இறக்கவில்லை என்றும் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT