Published : 19 Nov 2020 06:31 PM
Last Updated : 19 Nov 2020 06:31 PM
ஸ்ட்வீ மெக்குயின் இயக்குகிறார் என்றால், தான் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாக ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படங்களில் நடித்திருக்கும் இளம் நடிகர் ஜான் போயேகா கூறியுள்ளார்.
டேனியல் க்ரெய்க் நடிப்பில் வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை' திரைப்படம்தான் அவர் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் கடைசித் திரைப்படம். இதன் பிறகு புதிய ஜேம்ஸ் பாண்டாக டாம் ஹார்டி, ஜேம்ஸ் நார்டன், இட்ரிஸ் எல்பா, ரிச்சர்ட் மேடன் உள்ளிட்ட நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய 'ஸ்டார் வார்ஸ்' திரைப்படங்களில் ஃபின் என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான ஜான் போயேகா, ஜேம்ஸ் பாண்டாக நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார். '12 இயர்ஸ் எ ஸ்லேவ்', 'ஷேம்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஸ்டீவ் மெக்குயின் புதிய 'ஜேம்ஸ் பாண்ட்' திரைப்படத்தை இயக்கினால் இதில் நடிக்கத் தயார் என்று போயேகா கூறியுள்ளார்.
மெக்குயினும், போயேகாவும் 'ஸ்மால் ஆக்ஸ்' என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினர். இதே திரைப்படத்தில் போயேகாவுடன் நடித்த லெடிட்டியா ரைட், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க போயேகா ஆர்வம் காட்டுவார் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
லெடிட்டியாவின் இந்த பதிலை வைத்து போயேகாவிடம், ஜேம்ஸ் பாண்டாக நடிக்க விருப்பமா என்று கேட்டபோது, "ஓ, கண்டிப்பாக. ஸ்டீவ் மெக்குயின் இயக்குகிறார் என்றால் இதற்கு நான் தயார். நாம் இந்த உலகுக்கு வித்தியாசமான ஒன்றைக் காட்டுவோம். அதே நேர்த்தியைக் கொண்டு வருவோம். ஜேம்ஸ் பாண்டுக்கென சில விஷயங்கள் இருக்க வேண்டும். அது இருக்கும். அதே நேரம் எங்களால் புதிதாக ஒன்றையும் செய்ய முடியும்" என்று போயேகா பதிலளித்துள்ளார்.
அனைத்து இன நடிகர்களுக்கும், பாலினத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற குரல் கடந்த சில வருடங்களாகவே ஹாலிவுட்டில் எழுந்து வருகிறது. எனவே பல தயாரிப்பு நிறுவனங்கள், தங்களை நல்ல வெளிச்சத்தில் காட்டிக் கொள்ள தங்கள் திரைப்படங்களில் பெண் கலைஞர்கள், கருப்பின, ஆசியக் கலைஞர்கள் ஆகியோரை ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.
இதையொட்டி, புதிய ஜேம்ஸ் பாண்டாக ஒரு நடிகையை கூட நடிக்க வைக்கலாம் என்று சில மாதங்களுக்கு முன் செய்திகள் வந்தன. போயேகா, மெக்குயின் இருவருமே கருப்பினக் கலைஞர்கள் என்பதால், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் இவர்களோ அல்லது வேறு கருப்பினக் கலைஞர்களோ கூட ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான 'நோ டைம் டு டை' அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT