Published : 19 Oct 2020 06:05 PM
Last Updated : 19 Oct 2020 06:05 PM
1997-ம் ஆண்டு வெளியான 'பேட்மேன் அண்ட் ராபின்' படம் தோல்வியடைந்ததால் ஹாலிவுட் தன்னை ஒதுக்கியதாக நடிகர் ஜார்ஜ் க்ளூனி கூறியுள்ளார்.
'பேட்மேன் அண்ட் ராபின்' திரைப்படத்தில் ஜார்ஜ் க்ளூனி பேட்மேனாகவும், வில்லனாக அர்னால்டும் நடித்திருந்தனர். ஆனால் படம் தோல்வியடைந்தது. ஜோயல் ஷூமேக்கர் இயக்கியிருந்த இந்தத் திரைப்படம் இதுவரை வந்த பேட்மேன் திரைப்படங்களிலேயே மிகக் குறைந்த வசூல் என்கிற பெயரைப் பெற்றுள்ளது.
மேலும், மோசமான சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் என்கிற பட்டியலில் தவறாமல் இடம்பெற்றுள்ளது. 1997-ல் இந்தத் தோல்விக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் வார்னர் பிரதர்ஸ், அடுத்த பாகங்களின் திட்டத்தைக் கைவிட்டனர். இதன் பிறகு 2005-ம் ஆண்டு புதிய இயக்குநர், நாயகனுடன் 'பேட்மேன் பிகின்ஸ்' எனப் புதிதாக ஆரம்பித்தனர்.
'பேட்மேன் அண்ட் ராபின்' தோல்விக்குப் பிறகு பல இயக்குநர்கள் தன்னிடம் பணிபுரிய மறுத்ததாக ஜார்ஜ் க்ளூனி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். மேலும், இயக்குநர் ஸ்டீவ் ஸோடர்பெர்க் இயக்கத்தில் நடித்த 'அவுட் ஆஃப் சைட்' படம்தான் நிலையை மாற்றியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"ஸ்டீவனின் சில படங்களும் தோல்வியடைந்திருந்தன. எனக்கு 'பேட்மேன் அண்ட் ராபின்' தோல்வியடைந்திருந்தது. இருவருக்குமே ஒரு வெற்றி தேவைப்பட்ட நிலை அது. அந்த நேரத்தில் நான் ஈஆர் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் செய்து வந்தேன். தொலைக்காட்சியிலிருந்து திரைப்படத்துக்கு வரலாமா என்கிற பெரிய விவாதம் இருந்தது. அப்போது அது பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. என்னால் அதில் உறுதியாகப் பேச முடியவில்லை.
'பேட்மேன்' தோல்விக்குப் பிறகு என்னைத்தான் அதற்குப் பொறுப்பாக்குவார்கள் என்பதை நான் உணர்ந்தேன். அதனால் ஒரு நல்ல கதைக்காகக் காத்திருந்தேன். அது கிடைத்தவுடன் ஸ்டீவன் அதை இயக்க வேண்டும் என்று அவரைத் துரத்திப் பிடித்தேன். ஏற்கெனவே அதை இயக்க ஒரு இயக்குநர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவர் விலகிவிட்டார். எனவே எல்லாம் சேர்ந்து கை கொடுத்தது. ஸ்டீவன் அற்புதமாக இயக்கித் தந்தார்" என்று ஜார்ஜ் க்ளூனி பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT