Published : 15 Sep 2020 09:49 PM
Last Updated : 15 Sep 2020 09:49 PM
பிரபல பிரிட்டிஷ் நடிகர் ரோவன் அட்கின்ஸனின் 'மிஸ்டர் பீன்' நிகழ்ச்சி ஆரம்பித்து 30 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. வளர்ந்த மனிதரின் உடலில் இருக்கும் குழந்தை என்பதே அந்தக் கதாபாத்திரம். எனவே இந்த நிகழ்ச்சி நீண்ட நாள் நிலைத்து நிற்கும், பெரிய வெற்றி பெறும் என்று தான் நம்பியதாகக் கூறியுள்ளார் அட்கின்ஸன்.
1990-ம் வருடம் பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நகைச்சுவைத் தொடர் 'மிஸ்டர் பீன்'. தொடர்ந்து உலகின் பல நாடுகளில், பல்வேறு சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பானது. இந்தக் கதாபாத்திரத்தை வைத்து கார்ட்டூன் தொடரும், திரைப்படங்களும் கூட எடுக்கப்பட்டுள்ளன. 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில், ரோவன் அட்கின்ஸன் 'மிஸ்டர் பீன்' கதாபாத்திரத்தில் தோன்றி, சிறிய நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்.
இந்தத் தொடரின் 30 ஆண்டுகள் நிறைவையொட்டி பேசியிருக்கும் ரோவன் அட்கின்ஸன், "மிஸ்டர் பீன் நீண்ட நாள் நிலைத்திருக்கும், வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என்று நான் எப்போதுமே நம்பியிருந்தேன். ஏனென்றால், இதில் நகைச்சுவை அனைத்தும் காட்சிகள் சார்ந்தது. மேலும், மிஸ்டர் பீன் என்ற கதாபாத்திரம், வளர்ந்த குழந்தையைப் போலத்தான். எந்த இனத்திலும், கலாச்சாரத்திலும் குழந்தைகள் ஒரே மாதிரிதான் நடந்துகொள்ளும். எனவே, அதைப் புரிந்து சிரிப்பது சுலபம். இந்த நிகழ்ச்சி 30 வருடங்கள் கழித்து இன்றும் பிரபலமாக இருப்பதற்கு, அந்தக் கதாபாத்திரத்தின் குழந்தைத்தனமான, அராஜகச் செயல்கள் என்றுமே பார்க்க நகைச்சுவையாக இருக்கிறது என்பதால் தான்" என்கிறார்.
ஊரே பார்த்து ரசித்துச் சிரித்த மிஸ்டர் பீன் தொடரின் படப்பிடிப்புத் தனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்கிறார் அட்கின்ஸன். "இதைச் சொல்வதற்கு என்னை மன்னியுங்கள். எனக்கு எந்தப் படப்பிடிப்புமே மன அழுத்தத்தைத் தரும். அதுவும் குறிப்பாக மிஸ்டர் பீன். ஏனென்றால் அதை நகைச்சுவையாகச் சித்தரிக்க வேண்டும் என்ற பொறுப்பு, சுமை.
நம்முடன் நடிப்பவர்கள் அற்புதமாக நடிப்பார்கள் என்பதெல்லாம் சரிதான். என்றாலும், அந்த நகைச்சுவை சிரிக்க வைக்கிறதா இல்லையா என்பது என் பொறுப்பில்தான் வரும். அது மன அழுத்தத்தைத் தந்தது. ஆனால், படப்பிடிப்பு முடிந்ததும் நான் கொண்டாடுவேன்.
எங்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றியை நான் சந்தோஷமாகப் பார்க்கிறேன். ரசிகர்கள் இன்றும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு ரசிக்கிறார்கள் என்றால் அதற்கான மதிப்புடைய நிகழ்ச்சிதான் என்று நினைக்கிறேன்" என்று அட்கின்ஸன் கூறியுள்ளார்.
வசனமே இல்லாத நகைச்சுவைத் தொடரான இதில், என்றாவது அந்தக் கதாபாத்திரத்தைப் பேச வைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, "பல முறை. அதனால்தான் மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தை வைத்து வந்த முதல் திரைப்படத்தில் அவர் அதிகம் பேசுவார். அவர் நிறையப் பேசினால்தான் அவரது கதையைச் சொல்ல முடியும் என்று நாங்கள் நினைத்தோம். கார்ட்டூன்களில் அவர் நிறையப் பேசுகிறார். அதைக் கேட்கும்போது நகைச்சுவையாக இருக்கிறது" என்கிறார் ரோவன் அட்கின்ஸன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT