Published : 13 Sep 2020 01:19 PM
Last Updated : 13 Sep 2020 01:19 PM
2008-ம் ஆண்டு 'அயர்ன் மேன்' திரைப்படத்துடன் மார்வல் சூப்பர் ஹீரோக்களின் மார்வல் சினிமா உலகம் என்று சொல்லப்படும் திரைப்பட வரிசை ஆரம்பமானது. தொடர்ந்து 'ஹல்க்', 'தோர்', 'கேப்டன் அமெரிக்கா' என அடுத்தடுத்து சூப்பர் ஹீரோ படங்களை வெளியிட்டு அந்தக் கதாபாத்திரங்கள் வாழும் உலகம் எனத் தனியாகச் சித்தரிக்கப்பட்டது.
மூன்று கட்டங்களாக மொத்தம் 23 படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இதில் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படமே இந்த வரிசையில் கடைசி. இந்தப் படம் உலகத் திரை வரலாற்றில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
தற்போது மார்வல் சினிமா உலகின் நான்காவது கட்டத்தில் வெளியாகவுள்ள படங்களின் வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதில் அடுத்த வருடம் 'தோர்' படத்தின் நான்காவது பாகமான 'தோர்: லவ் அண்ட் தண்டர்' திரைப்படம் வெளியாகவுள்ளது. 'தோர் ரக்னராக்' படத்தின் இயக்குநர் டைகா வைடிடி இந்தப் படத்தை இயக்குகிறார். கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மீண்டும் தோர் கதாபாத்திரத்திலும், டெஸ்ஸா தாம்ஸன் வால்கைரீ கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். தோர் காதலியாக முதல் இரண்டு தோர் படங்களில் தோன்றிய நடாலி போர்ட்மேனும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தோடு தோர் கதாபாத்திரத்தில் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் ஓய்வு பெறப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த தகவலுக்கு க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
‘தோர் கதாபாத்திரத்துக்கு வெறும் 1500 வயது தான் ஆகிறது. நிச்சயமாக இந்த படத்தோடு நான் இந்த கதாபாத்திரத்தை விட்டு விலகப் போவதில்லை. குறைந்த பட்சம் அப்படி நடக்காது என்றும் நம்புகிறேன்.
இப்படத்தின் கதையை படித்தவுடன் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உறுதியாக இப்படத்தில் நிறைய காதலும், மின்னல்களும் இருக்கும்.
'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்துக்கு பிறகும் நான் மார்வெல் உலகத்தில் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.
இவ்வாறு க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT