Published : 15 Jul 2020 09:48 PM
Last Updated : 15 Jul 2020 09:48 PM
முதல் 'எக்ஸ்-மென்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், படம் குறித்த தங்கள் நினைவுகளைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
2000-ம் ஆண்டு ஜூலை 14 அன்று (அமெரிக்காவில்) வெளியான படம் 'எக்ஸ்-மென்'. மார்வல் காமிக்ஸுக்காக ஸ்டான் லீ உருவாக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தை ப்ரையான் சிங்கர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றியால் இதன் அடுத்தடுத்த பாகங்களும், இதன் கதாபாத்திரங்களை வைத்துத் தனிப் படங்களும் வெளியாகின. 'எக்ஸ்-மென்' படத்தின் வெற்றியே சூப்பர் ஹீரோ படங்களுக்கான புதிய அத்தியாயத்தை ஆரம்பித்ததாகக் கருதப்படுகிறது.
'எக்ஸ்-மென்' வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் இயான் மெக்கெல்லன், ஹாலே பெர்ரி, ஹ்யூ ஜாக்மேன் ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் படம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.
படத்தில் வில்லன் மெக்னீடோ கதாபாத்திரத்தில் நடித்த மெக்கெல்லன், தான் ஒரு தொலைபேசி பூத்தில் பேசுவது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து, "இருபது வருடங்களுக்கு முன்னால் இதே நாளில், சாண்டா மோனிகா பொலவார்ட் பகுதியில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த ஒரு போன் பூத்தில் எடுக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
வால்வரீன் கதாபாத்திரத்தில் உலகப் புகழடைந்த ஹ்யூ ஜாக்மேன், அந்தக் கதாபாத்திரத்துக்காக தான் தயாரான வீடியோவைப் பகிர்ந்து, "வால்வரீன் கதாபாத்திரத்துக்காக உடலைத் தயார் செய்ய முடியுமா என்று மூன்று வாரங்களுக்கு முன் தயாரிப்புத் தரப்பு கேட்டபோது, நான் அதிகபட்சமாக வாக்கு தந்திருக்கலாம். ஆனால் அப்படித் தராமல் இருக்க முடியுமா? எக்ஸ்-மென் உலகத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
ஸ்டார்ம் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஹாலே பெர்ரியும் ஒரு கார்ட்டூனைப் பகிர்ந்துள்ளார். எக்ஸ்-மென் உலகின் 13-வது படமான 'தி நியூ ம்யூடண்ட்ஸ்' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT