Published : 26 Jun 2020 07:53 PM
Last Updated : 26 Jun 2020 07:53 PM
நடிகர் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிப்பில் வெளியான 'எக்ஸ்ட்ராக்ஷன்' திரைப்படத்தின் ட்ரெய்லரை, நைஜீரியாவைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் மீண்டும் உருவாக்கியுள்ளனர். இதை கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் பாராட்டியுள்ளார்.
'தோர்' கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த். 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' திரைப்படத்துக்குப் பிறகு ஹெம்ஸ்வொர்த் நடித்திருந்த படம் 'எக்ஸ்ட்ராக்ஷன்'. 'எண்ட்கேம்' திரைப்படத்தின் இயக்குநர்களான ரூஸோ சகோதரர்கள், இந்தப் படத்தைத் தயாரித்திருந்தனர். நெட்ஃபிளிக்ஸில் இந்தப் படம் வெளியானது.
நைஜீரியாவில் உள்ள இகோரோடு பாய்ஸ் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் சிறுவர்கள் குழு, 'எக்ஸ்ட்ராக்ஷன்' திரைப்படத்தின் ட்ரெய்லரை, அப்படியே ஒவ்வொரு காட்சியாகப் பிரதி எடுத்து, தங்களிடம் இருக்கும் வசதிகளை வைத்து மீண்டும் உருவாக்கியுள்ளனர். குறைந்தபட்ச வசதிகளை வைத்து இந்தச் சிறுவர்கள் உருவாக்கியுள்ள இந்த ட்ரெய்லர் சுவாரசியமாகவும், நகைச்சுவையாகவும், அவர்கள் படைப்பாற்றலைக் காட்டும் விதத்திலும் இருந்தது. தொடர்ந்து இணையத்தில் இது வைரலானது.
இந்தச் சிறுவர் குழுவின் ட்விட்டர் பக்கத்திலும், "எங்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும். க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த்தும், நெட்ஃபிளிக்ஸும் இந்த மறு ஆக்கத்தைப் பார்ப்பார்கள் என்று நம்புகிறோம். தயவுசெய்து ரீட்வீட் செய்யுங்கள்" என்று பகிர்ந்திருந்தனர்.
அவர்கள் ஆசைப்பட்டது போலவே படத்தின் நாயகன் ஹெம்ஸ்வொர்த் இந்த ட்ரெய்லரை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். மேலும், "எக்ஸ்ட்ராக்ஷன் ட்ரெய்லரின் ஒவ்வொரு ஷாட்டையும் மறு உருவாக்கம் செய்திருக்கும் இந்த இளம் இயக்குநர்களுக்கு என் பாராட்டுகள். அசலை விட உங்கள் வடிவம் நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன்" என்று பாராட்டியுள்ளார்.
ரூஸோ சகோதரர்களும் இவர்களைப் பாராட்டிப் பதிவிட்டதோடு, அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைத் தந்திருக்கின்றனர். "இந்த மறு உருவாக்கம் அட்டகாசமாக இருக்கிறது. 'எக்ஸ்ட்ராக்ஷன் 2' பிரத்யேகக் காட்சியை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்குத் தனிப்பட்ட தகவல் அனுப்புங்கள். நாங்கள் உங்களை அழைத்து வருகிறோம்" என்று ரூஸோ சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தங்கள் வாழ்வில் தாங்கள் நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் ஒரு நாள் என்றும், தங்கள் கனவு நனவாகி விட்டதாகவும் அந்தச் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
EPIC! https://t.co/ABwPn63chv
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT