Published : 22 Jun 2020 06:07 PM
Last Updated : 22 Jun 2020 06:07 PM
2014-ம் ஆண்டு பாடகர் ஜஸ்டின் பீபர் தன்னைப் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தார் என்று ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதை மறுத்துள்ள பீபர் அந்தச் சம்பவம் நடந்த நாளில் தான் எங்கு இருந்தேன் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
பெயரிடப்படாத ஒரு ட்விட்டர் கணக்கிலிருந்து கடந்த வார இறுதியில் ட்வீட் ஒன்று பகிரப்பட்டது. இதில், மார்ச் 9, 2014 ஆம் வருடம், டெக்ஸாஸின் ஆஸ்டின் பகுதியிலிருக்கும் ஃபோர் சீஸன்ஸ் ஹோட்டலில், ஜஸ்டின் பீபரால் தனக்குப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடந்ததாக ஒரு பெண் குற்றம் சுமத்தியுள்ளார். இதே நேரத்தில்தான் சவுத் பை சவுத்வெஸ்ட் இசை விழாவில் ஜஸ்டின் பீபர் திடீர் விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்தக் குற்றச்சாட்டை உண்மையின் அடிப்படையில் சாத்தியமற்றது என்று மறுத்திருக்கும் ஜஸ்டின் பீபர், அந்தத் தேதியின் ரசீதுகள், மின்னஞ்சல்கள், சமூக வலைதளப் பகிர்வுகள், ஊடகச் செய்திகள் ஆகியவற்றை ஆதாரங்களாகக் குறிப்பிட்டுள்ளார்.
"இதுவரை என் தொழில் வாழ்க்கையில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நான் புறக்கணித்தது போலவே இதையும் புறக்கணித்திருக்கலாம். ஆனால், என் மனைவியுடன் பேசிய பிறகு இதைப் பற்றிப் பேச முடிவெடுத்துள்ளேன். புரளிகள் அர்த்தமற்றவை. ஆனால், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை நான் எளிதாக விட்டுவிட முடியாது. உடனே உண்மையைப் பேச வேண்டும் என்று விரும்பினேன்.
ஆனால், ஒவ்வொரு நாளும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை தரும் வண்ணம், ஆதாரங்களைத் திரட்டிய பின்னரே அறிக்கை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை" என்று ட்விட்டரில் ஜஸ்டின் பீபர் பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த ட்வீட்டுகள் நீக்கப்பட்டுவிட்டாலும், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நாளில் அவர் வேறொரு ஹோட்டலில் தங்கியிருந்ததற்கான ஆதாரங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், அன்றைய நாளில் தனது காதலி செலீனாவுடனும், நண்பர்களுடனுமே தான் தங்கியதாக பீபர் குறிப்பிட்டுள்ளார்.
"பாலியல் வன்கொடுமை பற்றிய ஒவ்வொரு புகாரும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். அதனால்தான் இதில் என் பதிலைக் கூறியிருக்கிறேன். ஆனால், உண்மையின் அடிப்படையில் இந்தச் சம்பவம் நடந்திருக்கவே சாத்தியமில்லை. எனவே ட்விட்டருடனும், அதிகாரிகளுடனும் இணைந்து நான் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கப் போகிறேன்" என்று ஜஸ்டின் பீபர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT