Published : 22 Apr 2020 07:08 PM
Last Updated : 22 Apr 2020 07:08 PM
வார்னர் மீடியாவின் புதிய ஸ்ட்ரீமிங் சேவையான ஹெச்பிஓ மேக்ஸ், மே 27-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஹெச்பிஓ நவ் என்ற ஸ்ட்ரீமிங் சேவை சந்தையில் உள்ளது. ஆனால் இதில் ஹெச்பிஓவுக்கு சொந்தமான படங்களை, தொடர்களை மட்டுமே பார்க்க முடியும். மேக்ஸ் சேவையில், வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தின் திரைப்படங்கள், வார்னர் நிறுவனத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஏற்கெனவே ஹெச்பிஓ தொலைக்காட்சிக்கென இருக்கும் திரைப்படங்கள், தொடர்கள் ஆகியவையும் சேர்த்து இடம்பெறும்.
ஹெச்பிஓ தொலைக்காட்சியில் பிரபலமான 'கேம் ஆப் த்ரோன்ஸ்' உள்ளிட்ட எண்ணற்ற தொடர்களோடு சேர்த்து, இந்த ஸ்ட்ரீமிங் சேவைக்காகத் தயாரிக்கப்படும் புதிய தொடர்கள் இதில் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் உலகப் புகழ்பெற்ற 'ப்ரண்ட்ஸ்' தொடரும் ஹெச்பிஓ வசம் இருப்பதால், அதுவே பலரை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஜனவரி 1-ம் தேதி வரை நெட்ஃபிளிக்ஸில் 'ப்ரண்ட்ஸ்' தொடர் காணக் கிடைத்தது. ஆனால், தற்போது எந்த ஸ்ட்ரீமிங் சேவையிலும் 'ப்ரண்ட்ஸ்' இல்லை. மேலும் 'ப்ரண்ட்ஸ்' தொடரில் நடித்தவர்கள் மீண்டும் சந்திக்கும் ரீயூனியன் பகுதியும் இந்த ஸ்ட்ரீமிங் சேவை ஆரம்பமாகும்போது வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கரோனா நெருக்கடியால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த விசேஷப் பகுதி தாமதமாகும் என்று தெரிகிறது.
மாதம் 14.99 டாலர்கள் என்ற கட்டணத்தில் அமெரிக்காவில் தற்போது அதிக விலையில் கிடைக்கும் ஸ்ட்ரீமிங் சேவை இதுவே. யூடியூப் தொலைக்காட்சி வழியாகவும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT